சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளையின் 1 மில்லியன் முகமூடிகளை கையளிக்கும் நிகழ்வு

சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளையின் 1 மில்லியன் முகமூடிகளை கையளிக்கும் நிகழ்வு

சிங்கப்பூரிலுள்ள டெமாசெக் அறக்கட்டளையிலிருந்து 1 மில்லியன் லிவிங்கார்ட் முகக் கவசங்களை (20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான) நன்கொடை வழங்குவதற்கான கையளிக்கும் நிகழ்வு 2020 அக்டோபர் 07 ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிநாட்டு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ், சிங்கப்பூர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூரின் கௌரவ தூதுவர் கலாநிதி. ஜயந்த தர்மதாச ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பெறுமதி வாய்ந்த நன்கொடையின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சரியான நேரத்திலான உதவிக்காக டெமாசெக் அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கம் ஆகியவற்றிற்கு இராஜாங்க அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். டெமாசெக் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கையின் மாஸ் ஹோல்டிங்ஸ் இந்த நன்கொடையை ஆரம்பக் கட்டமாக வழங்கியுள்ளதுடன், இலங்கைக்கு மேலதிக உதவிகளை ஏற்பாடு செய்வதற்கான அதிகமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பாக கலாநிதி தர்மதாச தெரிவித்தார்.

இந்த ஒற்றுமையின் சைகையானது கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் எமது இரு நாடுகளுக்குமிடையிலான ஆழ்ந்த நட்பின் தெளிவான எடுத்துக்காட்டாகும் என வெளிநாட்டு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தனது கருத்துக்களில் தெரிவித்தார். இந்த சரியான நேரத்திலான உதவியானது இரு நாடுகளினதும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், இது 50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

டெமாசெக் பவுண்டேஷன் இன்டர்நெஷனல் என்பது சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், சமுதாய அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு உதவும் சிங்கப்பூர் அரச இறையாண்மை நிதியத்தின் மனிதநேய உதவியின் கீழான சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

லிவிங்கார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இலங்கையின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளர்களில் ஒன்றான மாஸ் ஹோல்டிங்ஸால் இந்த லிவிங்கார்ட் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. லிவிங்கார்ட் தொழில்நுட்பமானது, நுண்ணுயிர்களை அழிக்கும் ஒரு துணியை உள்ளடக்குவதுடன், சுவாசத்திலுள்ள பல்வேறு கிருமிகளை திறம்பட அழிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் காப்புரிமை பெற்ற லிவிங்கார்ட் வைரஸ் தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதுடன், இது நச்சுத்தன்மையற்றதும், மீண்டும் பயன்படுத்தக்கூடியதுமாகும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

7 அக்டோபர் 2020

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close