இந்து சமுத்திர பிராந்தியத்தில் பாதுகாப்புப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பையும் நிறுவனக் கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்கான அவசரத் தேவையை வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் மட்ட மாநாட்டிற்கு தகைமை பெறவிருக்கும் இலங்கை, 2018 அக்டோபரில் நடாத்திய 'இந்து சமுத்திரம்: எமது எதிர்காலத்தை வரையறுத்தல்' தடம் 1.5 மாநாட்டில், இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த பொதுவான புரிதலை இயக்கும் நிறுவப்பட்ட விதிகள் மற்றும் கொள்கைகளுடன், சர்வதேச விதிகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் உறுதிமொழியொன்றைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார். இலங்கையின் தலைமையில் 2019 ஆகஸ்ட் மாதத்தில் கொழும்பில் நடைபெற்ற பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு செயற்குழுவின் முதலாவது கூட்டத்தின் போது, வேலைத் திட்டமொன்றை இறுதி செய்வது, நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக நடைமுறை ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்கு உறுப்பு நாடுகளுக்கு உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.
55 நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 12 சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் 3 பாதுகாப்புத் தொழில்துறைகளை ஒன்றிணைத்த, 21 அக்டோபர் 2019 அன்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற காலி உரையாடல் 2019 இல் வெளிவிவகார செயலாளர் இந்த அவதானிப்புகளை மேற்கொண்டார். தொடர்ச்சியாக 10 வது ஆண்டாக இந்த இரண்டு நாள் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கை கடற்படைக்கு பாராட்டுகளை தெரிவித்த அவர், 'நாடுகடந்த கடல்சார் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான மனநிலையை சுத்தப்படுத்துதல்: தசாப்தத்தின் மீளாய்வு' என்ற இந்த ஆண்டின் கருப்பொருளானது ஆழமான பிரதிபலிப்பை ஊக்குவிக்கின்றது. எம்மைச் சூழவுள்ள விடயங்கள் மாற்றமடைந்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை நாம் உணரும் விதத்தையும் மாற்ற வேண்டிய அவசியமும் உள்ளது என்பதை அது ஒப்புக்கொள்கின்றது. தேவைப்பட்டால், மீண்டும் உற்சாகப்படுத்துவதற்கும், மீள் மதிப்பீடு செய்வதற்கும், மீள் அளவீடு செய்வதற்கும், ஒரு முக்கியமான தசாப்தமாக இருக்க அமைவதற்கான நிகழ்ச்சி நிரலை மீண்டும் அமைப்பதற்கும் இது எமக்கு வாய்ப்பளிக்கின்றது' எனத் தெரிவித்தார்.
செயலாளர் ஆரியசிங்க மேலும் கூறுகையில், '1971 ஆம் ஆண்டிலேயே ஐ.நா. வில் இந்து சமுத்திர அமைதி வலயம் தொடர்பான திட்டத்தை முன்னெடுத்துச் சென்றதும், 1985 ஆம் ஆண்டில் இந்து சமுத்திர கடல் விவகார ஒத்துழைப்பை ஊக்குவித்ததுமான இலங்கை, அதனை இந்த கருத்துகளின் முக்கியத்துவத்தை சிலர் மாத்திரமே உணர்ந்திருந்த அல்லது இந்த நடைமுறைகளுக்கு ஆதரவுகளை வழங்கிய தருணத்தில் மேற்கொண்டிருந்ததுடன், கடற்பயணங்களுக்கான சுதந்திரம் மற்றும் இந்து சமுத்திரத்தில் உள்ள கடல் வழித்தடங்களின் காவல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மேலதிக முயற்சிகளில் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது. இவை பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் எதிர்கால செழிப்புக்கும் இன்றியமையாத முன்நிபந்தனைகளாகும்' எனக் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திரத்தில் மாற்றமடைந்து வரும் இயக்கவியல் குறித்து விவரித்த அவர், உலக மக்கள் தொகையில் 35% வசிக்கும் பிராந்தியத்தின் கரையோர நாடுகள் 2018 ஆம் ஆண்டில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5% ஆக இருந்தன. மூன்றில் இரண்டு பங்கு உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியையும், மூன்றில் ஒரு பங்கு மொத்த சரக்குகளையும் கொண்டு செல்வதும், மிக முக்கியமான கடல் வழித்தடங்களை வழங்குவதுமான உலகின் பரபரப்பான மற்றும் மிக முக்கியமான வர்த்தக தாழ்வாரங்களில் ஒன்றாகிய இது, உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கின்றது. சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடிப்பதற்கும், இந்து சமுத்திரத்தில் கடற்பயணங்களுக்கான சுதந்திரத்தைப் பேணுவதற்கும் பாராட்டத்தக்க விருப்பத்தைக் கொண்டிருப்பதனால், சவால்களுக்கு மத்தியிலும், சில கடல் பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம் தற்போது ஒரு அமைதியான நிலையை அனுபவித்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
பிராந்தியத்தால் எதிர்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களைப் பற்றி உரையாற்றுகையில், 'குறிப்பாக ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அரசு சாராத செயற்பாட்டாளர்களின் செயல்களை, எமது சமுத்திரங்களின் பரந்த பகுதியைக் கண்காணிக்கவும், ஒத்த எண்ணங்களையுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களுடன் அந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளவும் ஏதுவான ஒரு பொறிமுறையினால் சிறப்பாகக் கையாளப்படலாம்' என வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டார். 'சட்டக் கட்டமைப்புகள் கடல்களைப் பாதுகாப்பதற்கான அடித்தளத்தை அமைக்கும் அதே வேளையில், நாடுகளிடையே நடைமுறை ஒத்துழைப்பு என்பது பல்வேறு நாடுகடந்த கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பின் முதல் வரியாகும்' என வெளிவிவகார செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார். 'அரசு சாராத செயற்பாட்டளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் என்பதில் சந்தேகமில்லை, சமுத்திரங்கள் தொடர்பாக சில சமயங்களில் எமது நடவடிக்கைகளை சிக்கலாக்கும் உறுதியற்ற தன்மைக்கு அரச செயற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்' எனவும் அவர் எச்சரித்தார்.
செயலாளர் தனது உரையில், 'தற்போது நடைபெற்று வரும் இந்து சமுத்திரத்தின் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய கட்டமைப்பிற்கு குறிப்பாக கவனம் செலுத்துவதற்கு அழைப்பு விடுத்தார். 'இந்த கட்டமைப்புகளில்', 'கரையோர நாடுகளின் உள்ளார்ந்த வகிபாகத்தினை அங்கீகரித்தல் வேண்டும்: பிராந்தியத்தில் புவியியல் ரீதியாக அமைந்துள்ள நாடுகள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது அவசியமாகும்' என அவர் வலியுறுத்தினார்'.
செயலாளர் ஆரியசிங்க, 'அந்தந்த தேசிய நலன்களையும், ஏனைய அனைத்து தனிப்பட்ட நாட்டு நலன்களையும், அடிப்படை சர்வதேச ஈடுபாடுகளையும், கடமைகளையும் மையமாகக் கொண்டு சேவை செய்யும் அதே வேளையில், விரிவான மற்றும் முழுமையான அணுகுமுறைகளைப் பின்பற்றுமாறு' இந்து சமுத்திர பிராந்தியத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தார். 'எமக்கு புறம்பானதாக எழும் புவிசார் மூலோபாய போட்டிகளில்', 'குறித்த தரப்பினரை சார்வதற்கு நாம் கட்டாயப்படுத்தப்படக்கூடாது, மாறாக அனைவருடனும் இணைந்து செயற்படவும், போட்டியிடும் நலன்களை சரிசெய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்' என அவர் வலியுறுத்தினார்.