2024 ஒக்டோபர் 22 முதல் 24 வரை, ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அவுட்ரீச்/ பிரிக்ஸ் ப்ளஸ் சமிட்டிற்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன வழிநடத்துவார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ், சமீபத்தில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றையும் உள்ளடக்கி அதன் உறுப்பினர்களை விரிவுபடுத்தியுள்ளது. பிரிக்ஸ் ஆனது, பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.
பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான விண்ணப்பித்தல் செயல்முறையை இலங்கை முறையாக ஆரம்பித்துள்ளது. பிரிக்ஸ் உறுப்புரிமையில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதி தனது சக நாட்டுத் தலைவரான ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள, அதேவேளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் உள்ள தனது சகாக்களுக்கு அவர்களின் ஆதரவைக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன, எதிர்வரும் தலைவர்கள் உச்சி மாநாட்டில் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சார்பாக உரையாற்றவுள்ளார். அவர் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட பிரதிநிதிகளைச் சந்தித்து, பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் மற்றும் இருதரப்பு நலன்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
அக்டோபர் 21 அன்று கசானைச் சென்றடைந்த வெளியுறவுச் செயலர் விஜேவர்தனவை டாடர்ஸ்தான் குடியரசின் மாநில மன்றத் தலைவர் திரு. ஃபரித் கயுல்லோவிச் முகமெட்ஷின், கசான் நகரின் முதன்மைத் துணை நகரபிதா திரு. டெனிஸ் கலின்கின், டாடர்ஸ்தான் குடியரசின் பல்தொழிற்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி லெனாரா முசாபரோவா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சின் நெறிமுறை அதிகாரிகள் ஆகியோர் சந்தித்தனர். அவருடன் தலைமைத் தூதுவர் பி.எம். அம்சா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.கே.யோகநாதன் ஆகியோரும் இணைத்துக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 அக்டோபர் 22