'சிறியதாக இருப்பினும், புத்திசாலித்தனமானதும், அதிகம் நிலையானதுமான வெளிநாட்டு வேலைவாய்ப்பின் எதிர்காலத் தடத்தினை இலங்கை உலகிற்கு வழங்கும்' என வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க தெரிவிப்பு

‘சிறியதாக இருப்பினும், புத்திசாலித்தனமானதும், அதிகம் நிலையானதுமான வெளிநாட்டு வேலைவாய்ப்பின் எதிர்காலத் தடத்தினை இலங்கை உலகிற்கு வழங்கும்’ என வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க தெரிவிப்பு

Image

இலங்கையின் தொழிலாளர் குடியேற்றத்தில் கட்டமைப்பு, நடைமுறை மற்றும் மனித இடைமுக முரண்பாடுகளை சரிசெய்ய உதவும் பல விடயங்களில் ஒரு கண் திறப்பாளராக தற்போதைய நிலைமை இருந்து வருவதாக வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க தெரிவித்தார். இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளிலுள்ள கள உண்மைகளை உணர்ந்து, கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மீண்டும் திசை திருப்புவதற்கானதொரு வாய்ப்பை இது இலங்கைக்கு அளிப்பதுடன், அதன் காரணமாக சிறியதாக இருப்பினும், புத்திசாலித்தனமானதும், அதிகம் நிலையானதுமான வெளிநாட்டு வேலைவாய்ப்பின் எதிர்காலத் தடத்தினை இலங்கை உலகிற்கு வழங்கும்.

'இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் வகிபாகம்சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள்என்ற தலைப்பில், தொழில்வாண்மையாளர்கள் சங்கங்களின் அமைப்பின் 33வது வருடாந்த அமர்வில் வீடியோ இணைப்பினூடாக உரையாற்றியபோது வெளிவிவகார செயலாளர் இந்த அவதானிப்புக்களை மேற்கொண்டார்.

இந்த ஆண்டு 2020 ஜூன் 27 - 28 ஆந் திகதிகளில் டிஜிட்டல் மாநாடாக, 'மீண்டெழுதல் - பேரழிவுகளும்வாய்ப்புக்களும்' என்ற தலைப்பில் நடைபெற்ற தொழில்வாண்மையாளர்கள் சங்கங்களின் அமைப்பின் வருடாந்த அமர்வை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

கோவிட்-19 நெருக்கடியானது, பெற்றுக்கொண்ட நாடுகளில் மருத்துவம் மற்றும் ஏனைய சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியற்றவர்களாகவும், அடையாளங்காணப்படின் நாடுகடத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புக்களையுடைய பாதிக்கப்பட்டவர்களாகவும் விளங்கும் வெளிநாடுகளிலுள்ள கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையின் ஆவணப்படுத்தப்படாத / ஒழுங்கற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அம்பலப்படுத்தியுள்ளதாக செயலாளர் ஆரியசிங்க தெரிவித்தார். அவர்களில் பலர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து கொள்ளமை கவலைக்குரிய விடயமாகும். சிலர் நாட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் முதலில் தம்மைப் பதிவு செய்திருப்பினும், பின்னர் தமது பதிவுகளை புதுப்பிப்பதில்லை என நம்பப்படுகின்றது. பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சதவீதம் 96.8% ஆக இருக்கும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் வெற்றிகரமாக பின்பற்றப்படுவதைப் போன்று, விரிவாக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் நன்மைகளை அனுபவிப்பதற்காக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளால், குறிப்பாக தொழிலின்மை, ஒப்பந்தங்களை இழத்தல், பணி அனுமதிகள் நீடிக்கப்படாமை மற்றும் தற்காலிக ஃப்ரீலான்ஸ் பணிகளை முடிவுறுத்தல் போன்ற விடயங்கள் சட்டபூர்வமாக தம்மைப் பதிவு செய்துகொண்டவர்களுக்கும் கூட அதிகரித்து வருவதுடன், அது அவர்களில் பலரை பெரும்பாலும் ஆதரவற்ற நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. இது இந்த வருடம் தொழில்களுக்காகச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தி, தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்தில் பாரிய வீழ்ச்சியைத் தோற்றுவிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களினாலான அந்நிய செலாவணி வருமானம் 2019 ஆம் ஆண்டில் 25.5% ஆக இருந்த அதே நேரத்தில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு சுமார் 8% ஆகும்.

'நிலையான மற்றும் நியாயமான பொருளாதாரங்களை' உறுதிப்படுத்தக்கூடிய முன்னோக்கு மற்றும் நெகிழ்ச்சியான கொள்கைகள், உத்திகளை உருவாக்குவதற்கு தற்போதைய நிலைமை உதவுவதாக அமையும் என செயலாளர் ஆரியசிங்க தெரிவித்தார். ஆசியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் நாடுகளை ஒன்றிணைத்து, அவற்றை ஜி.சி.சி.யில் தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளுடன் இணைக்கும் கொழும்பு செயன்முறை மற்றும் அபுதாபி உரையாடல் போன்ற சில முக்கியமான பிராந்திய முறைமைகளை வடிவமைத்து வழங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள இலங்கை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அனுப்பும், பெற்றுக் கொள்ளும் நாடுகளின் நலன்களுக்காக கோவிட் தொற்றுக்கு பிந்தைய சூழ்நிலையில் அதிகமான பங்கினை வகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இதில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கும்:

  • அதிகமாக சம்பாதிக்கக் கூடிய மற்றும், சராசரி இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளி, குறிப்பாக திறமையற்ற தொழிலாளர்கள் தற்போது எதிர்கொள்ளும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் குறைவான ஒரு சிறந்த பயிற்சி பெற்ற மற்றும் திறமையான புலம்பெயர்ந்த தொழிலாளியின் வெளிப்புறப் பாய்வை உறுதிசெய்தல்,
  • கோவிட்-19 க்குப் பின்னர், நாடுகளில் நிலவும் எதிர்காலத் தொழில் சந்தைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு அமைய பணியாற்றும் வகையிலான தொழிற்பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதற்காக சந்தை ஆராய்ச்சித் தளங்களை இணைத்து, அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பணிக்குழுவை மீள சீரமைத்தல்,
  • எமது கல்வி முறைமைகளை மீண்டும் வகுத்தல், மற்றும் எதிர்கால தொழிலாளர் சந்தைகளுக்கான உயர்ந்த மனிதவளக் குழாமாக மாணவர்களை மறுசீரமைத்தல்,
  • மலிவான, பாதுகாப்பான மற்றும் விரைவான பணம் அனுப்பும் முறைகளை மேம்படுத்துவதிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல்,
  • புலம்பெயர்ந்த மக்களை நிர்வகிப்பதில் 'புலம்பெயர்ந்தோர் ஆரோக்கியம்' ஒரு அடிப்படை விடயமாக மாறுவதை உறுதிசெய்தல்.

அண்மைய நெருக்கடியானது, கொழும்பிலும் ஏனைய நாடுகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களைக் கையாள்வதிலான குழப்பங்களைத் தகர்ப்பதற்கு உதவுவதோடு, அரசாங்கத்திற்குள் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தவும் உதவியுள்ளது என வெளிவிவகார செயலாளர் வலியுறுத்தினார். 'எதிர்பார்க்கப்படாத இத்தகையதொரு சூழ்நிலையில் ஒன்றாக விருத்தியடைவதற்கு எமக்கு உதவிய அத்தியாவசியமானதொரு காரணியாக கூட்டான எதிர்கால முயற்சிகளுக்கு இது உதவுகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த 'முழு அரசாங்கத்தின்' அணுகுமுறைக்கான வலுவான நெறிமுறையை மேலும் வலுப்படுத்தவும் கட்டமைக்கவும் இப்போது நாம் முயற்சிக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
01 ஜூலை 2020
Please follow and like us:

Close