வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் பிளஸ் மாநாட்டில் நிகழ்த்திய உரையில் பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து கொள்ள இலங்கையின் முடிவை மீண்டும் வலியுறுத்தினார்.

வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் பிளஸ் மாநாட்டில் நிகழ்த்திய உரையில் பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து கொள்ள இலங்கையின் முடிவை மீண்டும் வலியுறுத்தினார்.

2024 அக்டோபர் 24 இல் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் வெளியுறவுச் செயலர் அருணி விஜேவர்தன இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2024 அக்டோபர் 22 முதல் 24 வரையில் இடம்பெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாடு முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரிக்ஸ் உரையாடல் அமர்வு நடைபெற்றது.

16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு மற்றும் உரையாடல் அமர்வானது, ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடின் தலைமையில் நடைபெற்றதுடன், அதில் 35 தலைவர்கள் (அல்லது அவர்களின் பிரதிநிதிகள்) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியம் ஆகியவை பிரிக்ஸ் இன் உறுப்பு நாடுகளாகும். பிரிக்ஸின் 2024 இற்கான தலைவராக பிரேசில் பொறுப்பேற்கவுள்ளது.

கசான் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இவ்வுச்சிமாநாடு நிறைவடைந்தது. உலகளாவிய தெற்கு நாடுகளின் பிரிக்ஸ் மீதான கணிசமான ஆர்வத்தை இவ்வுச்சிமாநாடு வரவேற்றதுடன், பிரிக்ஸ் 'கூட்டாண்மை' நிலைப்பாட்டின் படிப்படியான விரிவாக்கமானது நன்மை பயக்குமென நம்பியது.

பிரிக்ஸ் உரையாடல் அமர்வுக்கான தனது உரையில், வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன, பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடனான நெருக்கமான தொடர்பைப் பெறுவதற்கான இலங்கையின் விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன இன்றைய உலகில் பிரிக்ஸின் பொருத்தப்பாடு, இலங்கைக்கான பிரிக்ஸ் உறுப்புரிமையின் முக்கியத்துவம் மற்றும் இக்குழுவில் இலங்கையின் பங்களிப்பு ஆகியவற்றை கோடிட்டுக் காட்டினார்.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை ,வெளியுறவுச் செயலாளர் விஜேவர்தன, இருதரப்பு சந்திப்புக்களை முன்னிட்டு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், எகிப்தின் பிரதி வெளியுறவு அமைச்சர் ரகுய் எல்-எட்ரெபி, சீனாவின் வெளியுறவு அமைச்சின் பொது உடைமைக்கட்சியின் மத்திய  குழு உறுப்பினர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதி அமைச்சர் மாஜாஒஹ்ஷூ ஆகியோரை சந்தித்தார். இச்சந்திப்புகளின் போது, ​​பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கி (NDB) ஆகியவற்றில் இணைவதற்கான இலங்கையின் ஆர்வம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதுடன், அதுகுறித்த இலங்கையின் ஆர்வம் வரவேற்கப்பட்டது.

வெளிவிவகார செயலாளர் புதிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டில்மா ரூசெப்ஃபையும் சந்தித்தார்.

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பதிகாரியான பி.எம் அம்சா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கான பொருளாதார அலுவல்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.கே.யோகநாதன் ஆகியோர் இலங்கைக் குழுவில் அங்கம் வகித்தனர்.

வெளியுறவு செயலாளரின் உரையின் முழுமையான எழுத்துவடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 அக்டோபர் 26

.....................................

பிரிக்ஸ் உச்சிமாநாடு, கசான் 2024 அக்டோபர் 24

இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தனவின் அறிக்கை

 முழுமையான உரை

ரஷ்ய கூட்டமைப்பின் மாண்புமிகு ஜனாதிபதியும், பிரிக்ஸ் அமைப்பின் மேதகு தலைவருமான விளாடிமிர் புட்டின் அவர்களே,

மேதகு தலைவர்களே,

இலங்கையானது, 16வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில்  மேதகு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தலைமைத்துவத்திற்கும், பிரிக்ஸ் உரையாடல் அமர்வினை நடாத்துவதற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

கடந்த மாதம் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். அதிமேதகு ஜனாதிபதி திஸாநாயக்க அவர்கள் இலங்கைக்கு விடுக்கப்பட்ட இவ்வழைப்பிற்கான தனது நன்றி கலந்த பாராட்டுக்களை இதன்மூலம் தெரிவிக்கிறார்.

மேதகு தலைவர் அவர்களே,

பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் முயற்சியானது எம்மைப்பொறுத்தவரையில், உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய அம்சமாகும்.

மேதகு தலைவர்களே,

பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு, அபிவிருத்தி மற்றும் மீள்திறன்மிக்க பொருளாதாரங்களை கட்டியெழுப்புவதற்கான எமது கூட்டு அபிலாஷைகளை நனவாக்குவதற்கு பிரிக்ஸ் ஒரு பயனுள்ள கூட்டாண்மையாக அமையுமென இலங்கை கருதுகிறது. இவ்வமைப்பின் பன்முகத்தன்மை மற்றும் இலங்கையை உள்ளடக்கிய அதன் அங்கத்துவ வேட்பாளர்களின் விரிவடையும் பட்டியலானது, இன்றைய உலகில் பிரிக்ஸின் பொருத்தப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. பிரிக்ஸ் ஆனது தனது விரிவாக்கத்தை கூட்டாண்மையின் அடிப்படையில் முன்னோக்கி அணுகுதல் குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

மேதகு தலைவர் அவர்களே,

ஐக்கியம், சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், உள்ளடங்கிய பன்முகத்தன்மையின் மூலம், மிகவும் சமமான மற்றும் நியாயமான உலகத்திற்கான பிரிக்ஸ் அமைப்பின் அபிலாஷைகளை இலங்கை பகிர்ந்து கொள்கிறது. ஐக்கிய  நாடுகள் சாசனத்தின் கட்டமைப்பிற்குள் சர்வதேச சட்டத்தின் பாரபட்சமற்ற பயன்பாட்டை நிலைநிறுத்தி, சர்வதேச தீர்மானங்களில் தென்னுலகுக்கான  குரல் மற்றும் தலைமைத்துவத்தை வழங்க பிரிக்ஸ் முயல்கிறது. பாரபட்சமின்றி மக்களுக்கு சமத்துவம் மற்றும் நீதியுடன் கூடிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் நெறிமுறை நிர்வாகத்தை வழங்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கங்களுடன் இது, இணங்கி எதிரொலிக்கிறது.

மேதகு தலைவர் அவர்களே,

பிரிக்ஸினால் வலியுறுத்தப்பட்டதற்கிணங்க, உலகளாவிய நிதி கட்டமைப்பு உட்பட உலகளாவிய நிர்வாகத்திற்கான அமைப்புக்கள் சீர்திருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியாக நாங்கள் கருதுகிறோம்.

இறையாண்மை கொண்ட நாடுகளின் சமூகத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் பலதரப்புக் கட்டமைப்பிற்குள் பிரதிபலிக்கப்பட வேண்டுமென்பதுடன், இது பாரிய மற்றும் சிறிய அனைத்து நாடுகளுக்கும் இறையாண்மை சமத்துவத்தின் மதிப்புமிக்க கொள்கையை அங்கீகரிக்கிறது.

இன்று சர்வதேச சமூகத்தின் அமைப்பு மற்றும் முன்னுரிமைகள் மற்றும் கடந்த நூற்றாண்டில் நிறுவப்பட்ட அதன் பலதரப்பு அமைப்பு  ரீதியிலான சட்டகங்களுக்கு இடையே ஒரு பொருத்தமின்மை நிலவுகின்றது.

நோய்த்தொற்று, காலநிலை மாற்றம், கடன், மின்னம்பலம், செயற்கை நுண்ணறிவு, உலகமயமாக்கப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் மற்றும் அதிநவீன விநியோகச் சங்கிலிகள் இல்லாத உலகில் இக்கட்டமைப்புகள் நிறுவப்பட்டன. அக்கட்டமைப்புக்களில் உலகளாவிய தெற்கின் பங்களிப்பு அடங்கியிருக்கவில்லை.

புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதார போட்டிகளால் சூழப்பட்டுள்ள உலகின் தற்போதைய நிலையானது, அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை திறம்பட பராமரிக்கவும், எதிர்காலத்தில், நிதி, காலநிலை, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாகவும் கட்டமைப்புகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்பதை தெளிவாக நிரூபிக்கிறது.

சர்வதேச சமூகத்தின் அமைப்பு மற்றும் தன்மையும் மாறியுள்ளது. இன்று வருகைதந்துள்ள பிரிக்ஸின் தற்போதைய மற்றும் வருங்கால உறுப்பினர்கள் பலர் முன்னேறிய பாதையில் பயணிப்பதுடன், ஏனைய சிலர் ஏற்கனவே வளர்ந்து வரும் பல்முனை உலகின் முன்னணி பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் அரசியல் சக்திகளில் ஒன்றாக உள்ளனர். இக்கட்டமைப்புகள் நிறுவப்பட்டபோது தென்னுலக நாடுகள்  இறையாண்மை கொண்ட சுதந்திர நாடுகளாக முன்னணியில் இருக்கவில்லை.

தெளிவாக இவ்வமைப்புக்கள் சமகால நோக்கத்திற்காகவும், பிரதிநிதித்துவப்படுத்துவனவாகவும், சட்டப்பூர்வமாகவும், ஜனநாயக ரீதியாவும் அமையப்பெற்றிருக்க வேண்டும்.

உதாரணமாக, நடுத்தர வருமான நாடொன்றாக, தொற்றுப்பரவல் நிலைக்குப் பிந்தைய இறையாண்மைக் கடனிலிருந்து மீள்வதில் இலங்கையின் தொடர்ச்சியான அனுபவம், உலகளாவிய பாதுகாப்பு வலையை வழங்குவதற்கும், பல மில்லியன் வாழ்வுகளைப் பாதிக்கும் கடன் நெருக்கடியில் உள்ள வளரும் நாடுகளுக்கு முன்னோக்கிச் செல்வதற்கும் சீர்திருத்தம் தேவை எனும் கடப்பாட்டை வலியுறுத்தப்படுகிறது.

பொது உடைமைகள், சமூக உள்கட்டமைப்பு மற்றும் மனித மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்வதைக் காட்டிலும் கடன் சேவை கொடுப்பனவுகள் முன்னுரிமை பெறும் பட்சத்தில், நிலையான வளர்ச்சி, சமூக உள்ளடக்கம் மற்றும் ஆற்றல் மாற்றத்தை முன்னேற்றுவதற்கான பல்தரப்பு முயற்சிகள் தெளிவாகக் கட்புலனாவதில்லை. தரவுகளின் அடிப்படையில், கணிசமான எண்ணிக்கையிலான வளரும் நாடுகள் கல்வி அல்லது சுகாதாரத் துறைகளைக் காட்டிலும், வட்டி செலுத்துதலுக்காக அதிகம் செலவிடுகின்றன.

புதிய அபிவிருத்தி வங்கி (NDB) போன்ற முன்முயற்சிகள், உலகளாவிய தெற்குப் பொருளாதாரங்களில் நிலையான மற்றும் முக்கியமான பௌதீக மற்றும் சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான சில இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் திறனைக் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதனடிப்படையில், புதிய அபிவிருத்தி வங்கியின் அங்கத்துவத்திற்கான விண்ணப்பத்தை முன்னோக்கி நகர்த்த இலங்கை உத்தேசித்துள்ளது.

இப்பின்னணியில், வளர்ச்சியை அதிகரிக்கவும், நமது மக்களுக்கு உறுதியான பலன்களை உருவாக்கவும் வர்த்தகம், முதலீடு, பொருளாதாரக் கூட்டாண்மை மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை விரிவுபடுத்தவும் பிரிக்ஸ் தலைவர்கள் முன்னுரிமை அளித்துள்ளனர்.

இலங்கையில், தற்போதைய பொருளாதார நிர்வாகம், விவேகமான நிதி மற்றும் நாணய சீர்திருத்தங்கள் மற்றும் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளின் விளைவாக, 2024 ஆம் ஆண்டிற்கான மேல்நோக்கிய சீராக்கப்பட்ட வளர்ச்சி வீதத்துடனான விரைவான பொருளாதார ஸ்திரத்தன்மையை நாங்கள் அடைந்துள்ளோம். பிரிக்ஸ் போன்ற பிற வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களுடன் பரஸ்பர ஆதரவுடன் சாத்தியமான ஒத்துழைப்பை விரிவாக்க நாங்கள் எதிர்ப்பார்த்துள்ளோம் .

ஆழ்ந்த பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியைத் தொடர்ந்து நாங்கள் உறுதிப்படுத்துவதோடு, படிப்படியாக வெளிப்புற இடையகங்களை மீண்டும் கட்டமைக்கும்போது, ​​பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பிலான தடைகளைத் தவிர்ப்பதற்கும் தேசிய நாணயங்கள், துணை நிதியியல் ஏற்பாடுகள் மற்றும் கட்டண முறைகளைப் பயன்படுத்துவதனை பிரிக்ஸின் பரஸ்பர ஆதரவிற்கு சாத்தியமான ஒத்துழைப்புடன் பணியாற்ற ஆவலாயுள்ளோம்.

மேதகு தலைவர் அவர்களே,

இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ள இலங்கையின் மூலோபாய கடல்சார் இருப்பிடம், பரபரப்பான கிழக்கு-மேற்கு கடல்வழித் தொடர்பாடல் மற்றும் அதன் இலத்திரனியல் மற்றும் மனித வள உட்கட்டமைப்பு ஆகியவை பிரிக்ஸ் கட்டமைப்பிற்கு ஒரு தனித்துவமான பெறுமதி ஏற்படுத்துவதாய் அமையும். நாடு ஒரு பெரிய கடல் வர்த்தக மையமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், உலகத் தரம் வாய்ந்த துறைமுகம் மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கான கடல்சார் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க கடல்சார் உட்கட்டமைப்பை வழங்குகிறது. கடல்சார் நலன் மற்றும் பாதுகாப்பு, கடல்வளம் பேணுதல் மற்றும் கடல்சார் போக்குவரத்துக்கான வழிசெலுத்தலின் சுதந்திரத்தை மேம்படுத்துவதில் இலங்கை ஒரு மூலோபாய கடல் பங்குதாரராய் விளங்குகிறது.

தலைவர் அவர்களே,

பாதுகாப்புப் பிரச்சினைகளில், பல பிராந்திய மற்றும் சர்வதேச மன்றங்களில் தொடரும் வெளிப்படையான மோதல் சூழ்நிலைகள் குறித்து கசான் பிரகடனம் கவலை தெரிவிக்கிறது. மோதல்களின் அதிகரிப்பு மற்றும் பாரிய அளவிலான மனிதாபிமான துன்பங்களை ஏற்படுத்தும் ஆயுதங்களுக்கான பரந்த மற்றும் வீணான செலவுகள் ஒருபோதும் இராஜதந்திரம், நிராயுதபாணியாக்கம், பேச்சுவார்த்தை மற்றும் நெருக்கடிகளுக்கு அமைதியான தீர்வு ஆகியவற்றை மாற்றலாகாது.

இலங்கை பயங்கரவாதம் மற்றும் வன்முறையை நிராகரிப்பதுடன், அனைத்து நாடுகளின் சட்டபூர்வமான பாதுகாப்பு ரீதியான ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபைச் சாசனத்தினூடாக உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டமைப்பிற்குள் தீர்வுகளை கோருகிறது. தேர்ந்தெடுக்கும் தன்மை, அரசியல்மயமாக்கல் மற்றும் இரட்டைத் தரநிலைகள் இல்லாத சர்வதேச சட்டத்தின் பாரபட்சமற்ற பயன்பாட்டை இலங்கை ஆதரிக்கிறது.

காஸாவில் நிலவும் மோசமான மனிதாபிமான நிலைமை முடிவுக்கு வர வேண்டும் என்ற கசான் பிரகடனத்துடன் நாங்கள் உடன்படுகிறோம், மேலும் போர்நிறுத்தத்தை உறுதிசெய்து பாலஸ்தீன மக்களுக்கான நியாயமான மற்றும் நீடித்த தீர்வை இரு நாடுகளின் தீர்வின் கட்டமைப்பிற்குள் நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். லெபனான் உட்பட அப்பிராந்தியத்தில் நிலவும் அவசர நிலைமை மேலும் மோசமான நிலையை அடைவதை நாம் தடுக்க வேண்டும்.

அதிமேதகு தலைவரான புடின் அவர்களே,

பிரிக்ஸ் ஆனது உலகளாவிய தீர்மானமெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பாக இலங்கை கருதுவதுடன், இது நமது மக்களின் வாழ்க்கையில் சிறந்த ரீதியில் செல்வாக்கு செலுத்துகிறது. பிராந்திய மற்றும் பலதரப்பு அரங்குகளில் இலங்கையின் பங்களிப்புகள், அனைத்து நாடுகளுடனான நமது நட்புறவு, வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார ஈடுபாடு ஆகியவற்றுக்கான திறந்த தன்மை, தனியார் துறை, கடல், வான் மற்றும் இலத்திரனியல் உட்கட்டமைப்பு ஆகியவற்றினாலுமான, உலகத்துடனான எங்கள் இணைப்பை வலுப்படுத்துவதற்கு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் இனிவரும் தலைமுறைகளுக்கு நியாயமான மற்றும் நிலையானதும் வளமானதுமான எதிர்காலத்தை வழங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு, பிரிக்ஸின் கண்ணோட்டத்தில் ஆக்கபூர்வமான பங்காளியாக எம்மை நிலைநிறுத்துகிறது.

பிரிக்ஸின் எதிர்காலத் தலைவரான பிரேசிலை இலங்கை வாழ்த்துவதுடன், பிரிக்ஸின் நோக்கங்களுக்கு பங்களிப்பதில் அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆவலாயுள்ளது.

மேதகு தலைவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close