வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு  வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வசதிகளை வழங்குகின்றது 

வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு  வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வசதிகளை வழங்குகின்றது 

_MG_8118

 சுற்றுலா மற்றும் பிற வீசாப் பிரிவுகளில் இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் எந்தப் பிரச்சனைகளுமின்றி தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இலங்கையிலிருந்து ஏனைய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவதனால், இந்த ஏற்பாடுகள் இலங்கையிலிருந்து புறப்படும் வழமையான விமானங்கள் மூலமாகவும் வாடகைக்கு அமர்த்தப்படும் விமானங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும்.

 

இந்த ஏற்பாடுகள் சம்பந்தமாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மேற்குலக நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களும், பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் திணைக்களம், குடிவரவுத் திணைக்களம், விமான  நிலையம் மற்றும் விமானச் சேவைகள், இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்புப் பணியகம், சிவில் விமானப்போக்குவரத்து மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றிலிருந்து பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைப் பொறுத்தவரையில், இக்காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் விமான நிலையம் செல்லும்போது தமது விமானச் சீட்டினை, பயணி மற்றும் பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் மற்றும் சாரதிக்கான அனுமதிச்சீட்டாகப் பயன்படுத்தலாம் என பதில் பொலிஸ் மாஅதிபர் உறுதியளித்துள்ளார். முன்னணி டாக்சி நிறுவனங்களையும் ஹோட்டல்களையும் இந்தச் செயற்பாடுகளுக்கு உதவியளிக்குமாறு கோரியிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற இராஜதந்திரிகள், இலங்கையில் தங்கியிருக்கும் தமது நாட்டு சுற்றுலாப்பயணிகள் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளின் உரிமையாளர்களாலும், பொதுமக்களாலும் எதிர்கொள்ளும் எதிர்மறையான செயற்பாடுகள் குறித்தும் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அது தொடர்பில், இந்த கடினமான காலகட்டத்தின்போது வெளிநாட்டுப் பிரஜைகளிடம் இலங்கையின் பாரம்பரிய விருந்தோம்பலைக் கடைப்பிடிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிகளால் உறுதியளிக்கப்பட்டது.

இவ்வாறான சம்பவங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு, பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படுவதற்காகவென சிறப்புத் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் சிறப்புத் தொடர்பாடல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இலங்கை மேற்கொண்ட விண்ணப்பத்தின் பேரில், குறுகிய வீசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று அது காலாவதியான இலங்கையர்களுக்கு வீசா நீடிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல அரசாங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர். இலங்கையின் கோரிக்கையைத் தாம் உயர்ந்த கவனத்தில் கொண்டுள்ளதாக ஏனைய நாடுகள் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுக்கு உறுதியளித்துள்ளன. ஏற்கனவே இலங்கையும் இங்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுப் பிரஜைகளின் வீசாக்களை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துள்ளது.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
20 மார்ச் 2020

_MG_0586

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close