மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒன்றிணைந்துள்ளன

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒன்றிணைந்துள்ளன

Pic-2

வெளிநாடுகளில் 16 இடங்களிலுள்ள இலங்கைத் தூதரகங்களினுடாக, பணியகத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு நிலையைப் பொருட்படுத்தாமல் புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலன்புரி நிதியிலிருந்து வளங்களை கிடைக்கச்செய்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் இந்த வாரம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளதாக மத்திய கிழக்கிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிதியானது, ஏற்கனவே வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் 67 நகரங்களிலுள்ள இலங்கையின் உள்நாட்டு சங்கங்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள மத நிறுவனங்களுடன் இணைந்து தூதரகங்கள் வழங்கிய சேவைகளுக்கு மேலதிகமானதாகும். தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் மத்தியில், வெளிநாடுகளிலுள்ள அனைத்து இலங்கையர்களினதும் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, உலர் உணவுகளின் விநியோக முயற்சிகளை அதிகரிப்பதற்காக மேலதிகமான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு திறைசேரியிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கோரியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, இலங்கையில் விமான நிலையங்கள் தற்போது மூடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்குத் திரும்ப முடியாத புலம்பெயர்ந்தோர் அனுபவிக்கும் உடனடியான சிரமங்களை சமாளிப்பதற்கு இது உதவியாக அமையும்.

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையில் புதன்கிழமை (ஏப்ரல் 15) இடம்பெற்ற, பிராந்தியத்தை மேற்பார்வையிடும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உதவித் தூதரகங்களின் தூதுவர்கள் பங்குபற்றிய வீடியோ மாநாட்டின் போது இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. தற்போதைய நெருக்கடியின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் ஏனைய அம்சங்களும் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டன. பஹ்ரைன், குவைத், ஜோர்தான், லெபனான், ஓமான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கான தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரிவுத் தலைவர்கள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலின் போது கலந்து கொண்டனர். இதற்கு முன்னர், வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து சந்தித்ததுடன், குறிப்பாக தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து வெளிப்படும் சூழல்களின் பின்னணியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கொள்கை மாற்றங்கள் விவாதிக்கப்பட்டன. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சபை உறுப்பினர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தமது அடிப்படை வாழ்க்கை நிலைமைகளைப் பராமரிப்பதற்கான அவசர உதவிகள் தேவைப்படும் தொழிலாளர்களின் அதிகரித்துவரும் வேலையில்லாப் பிரச்சினைகள், ஒப்பந்தங்களை இழத்தல், தொழில் அனுமதிகளை நீடிக்காதிருத்தல் மற்றும் தற்காலிகமான வீட்டிலிருந்து பணியாற்றும் தொழில்களை இடைநிறுத்துதல் ஆகியவற்றினால் ஏற்படும் விளைவுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் முடிந்தவரை அவர்களது குடும்பத்தினர் நாடு திரும்புவதை உறுதிசெய்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விஷேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை அனுமதித்து, ஏற்கெனவே பொது மன்னிப்பினை அறிவித்துள்ள நாடுகளை இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை கவனத்தில் கொண்டு, பதிவு செய்யப்படாத நிலையை சட்டப்பூர்வமாக்குவதில் சாத்தியமான தீர்வுகளை எய்துவதற்காகவும், மற்றும் உடன்படிக்கைகளை மீறுதல், தொழில் இழப்பு மற்றும் சட்டபூர்வமான நிலை காரணமாக எழுந்த பல்வேறு பிணக்குகளுக்கு இணக்கமான தீர்வுகளைக் கண்டறிவதற்காகவும் உள்நாட்டு அதிகாரிகள் மற்றும் உரிய தொழிலாளர் அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இலங்கைத் தூதரகங்களுக்கு அமைச்சு அறிவுறுத்தியது.

கோவிட்-19 தொற்றுக்கு உட்பட்டதாக சந்தேகத்தின் பேரில் அல்லது தொற்றுக்கு உட்பட்டதன் காரணமாக மருத்துவ உதவிகளை அணுகுகின்ற இலங்கையர்களை மருத்துவ வசதிகளை வழங்கும் உள்நாட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கான உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்பிறகு தூதரக அதிகாரிகளால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தூதரகங்கள் அமைச்சிற்கு மேலும் அறிக்கையிட்டன.

உதவிகள் தேவைப்படும் இலங்கையர்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் சில நாடுகளில் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் செம்பிறை அமைப்பு போன்ற பலதரப்பட்ட அமைப்புக்களால் வழங்கப்பட்ட ஆதரவுகள் குறித்தும், இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற சமூகத் தொண்டர்கள் ஊடாக இலங்கையர்களுக்கு மருத்துவ அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான உதவிகள் குறித்தும் இந்த வீடியோ மாநாட்டில் கலந்துரையாடப்பட்டன. இந்த ஆதரவுகளையும், இந்த உதவிகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டிய தேவையையும் பாராட்டி, அனைத்து இலங்கைத் தூதரகங்களுக்கும் மேலதிக உதவிகளை வழங்குவதற்காக, ஜெனீவாவிலுள்ள இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தலைமையகங்களுக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரகம் மற்றும் இலங்கையிலுள்ள அவற்றின் முகவரமைப்புக்களின் தலைவர்களினுடாக அமைச்சு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் இலங்கையர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக தூதரகங்களால் நிறுவப்பட்ட தரவுத்தளங்கள், தற்போது அமைச்சுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட இலங்கைத் தொழிலாளர்களின் தரவுகளை தொகுக்க உதவுகின்றன. மேலும், வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பானது வெளிநாடுகளிலுள்ள சமூகங்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வருவதுடன், இது தற்போதைய இந்த நெருக்கடியான நேரத்தில் அமைச்சு மற்றும் தூதரகங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து, இணைந்து செயற்படுவதற்கான சிறந்த தளமாக விளங்குகின்றது. ஏப்ரல் 15 ஆந் திகதிய நிலவரப்படி, இந்த இணைய முகப்பில் பதிவு செய்துள்ள 59,419 பேரில், 21,575 பேர் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் வசிப்பவர்களாவர்.

24 மணி நேர அவசர தொலைபேசி அழைப்புக்களை தொடர்ந்தும் பராமரிப்பதற்காகவும், அந்தந்த நிலையங்களில் உள்ள இலங்கை சமூகங்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் கேள்விகள் தொடர்பில் பணியாற்றுவதற்காகவும் தூதரகத்தின் ஊழியர்களை தொடர்ச்சியாக கடமைகளில் ஈடுபடுத்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனைத்துத் தூதரகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

 

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
15 ஏப்ரல் 2020

IMG_5272

Please follow and like us:

Close