பொதுநலவாய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் கூட்டத்திற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம்

பொதுநலவாய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் கூட்டத்திற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம்

2023 மார்ச் 15ஆந் திகதி லண்டனில் நடைபெற்ற 22வது பொதுநலவாய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  அலி சப்ரி பங்கேற்றார். இந்த விஜயத்தின் போது, உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட மதிப்புக்கள் மற்றும் கொள்கைகளை அடையாளப்படுத்தும் பொதுநலவாய சாசனத்தில் காலஞ்சென்ற மகாராணி கைச்சாத்திட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையிலான பொதுநலவாய தின விழாக்களிலும் அவர் கலந்துகொண்டார்.

பொதுநலவாய தலைமையகத்தில் நடைபெற்ற பொதுநலவாய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, இலங்கையின் சுறுசுறுப்பான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான காலநிலை நிதியுதவியின் கருப்பொருள்கள், உணவு மற்றும்  எரிசக்தி பாதுகாப்பிற்காக பொதுநலவாய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துதல், டிஜிட்டல் மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கான இரட்டை மாற்றத்தை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் ஜனநாயகத்தின் மூலம் நெகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்குதல் ஆகியன குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். பொதுநலவாயம் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் சொத்துகள் மீதான ஒழுங்குமுறைகளை செயற்படுத்துவதற்காக ஒரு மத்திய அமைப்பை அமைப்பதன் அவசியத்தை அவர் வெளிப்படுத்தினார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதன்முதலில் முன்மொழியப்பட்ட காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை இலங்கையில் அமைப்பது குறித்தும் அவர் கவனம் செலுத்தினார். பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் கே.சி உடனான அவரது சந்திப்பில், இலங்கையின் நிலையான அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்காக பொதுநலவாயத்தில் ஈடுபடுவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் சப்ரி, உயிரிழந்த பொதுநலவாய படைவீரர்கள் மற்றும் பெண்களின் நினைவாக மலர்மாலை அணிவித்தல் உட்பட மார்ச் 13ஆந் திகதி பொதுநலவாய தினத்தைக் குறிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்துஇலங்கை இளைஞர்களின் கலைநிகழ்ச்சியில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டாடும் வகையிலான விஷேட பிரார்த்தனை நிகழ்வு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்றது. 2023ஐ பொதுநலவாய சமாதான  ஆண்டாக அங்கீகரிப்பதற்காக உறுப்பு நாடுகளின் கொடிகளுடன் சமாதானத்திற்கான பொதுநலவாயக் கொடியும் ஏற்றப்பட்டது. பொதுநலவாய தலைவராக முதன்முறையாக உரையாற்றிய மூன்றாம் சார்லஸ் மன்னரால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை தந்த பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

பொதுநலவாய நிகழ்வுகளின் பக்க அம்சமாக, அமைச்சர் சப்ரி, ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தில் இந்தோ -  பசிபிக் இராஜாங்க அமைச்சர் அன்னே-மேரி ட்ரெவெல்யனை சந்தித்தார். குறிப்பாக பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் வகையில், இலங்கைக்கான பிரித்தானியப் பிரதமரின் வர்த்தகத் தூதுவரான அபெர்சொச் பிரபு மேர்வின் டேவிஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரியை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த இரண்டு சந்திப்புக்களிலும், அமைச்சர் சப்ரி, கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் மேம்பட்ட நிலைகள் குறித்து இக்கிய இராச்சியத் தரப்பினருக்கு எடுத்துரைத்ததுடன், செயன்முறையை விரைவுபடுத்துவதில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு இருதரப்புக் கடன் வழங்குநர்கள் மற்றும்  பரிஸ் கழக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், பொதுநலவாய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்கள் கூட்டத்தின் பக்க அம்சமாக, அமைச்சர் சப்ரி, ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவல்கள், பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகச் செயலாளர் ஜேம்ஸ் கிளெவர்லி மற்றும் மலேசியா, ருவாண்டா ஆகிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள்  மற்றும் பாகிஸ்தானின் வெளிநாட்டு இராஜாங்க அமைச்சர் ஆகியோரை சந்தித்தார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கைத் தேயிலை சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சிலோன் டீ' தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் அமைச்சர் சப்ரி கலந்துரையாடினார். இந்த அமர்வில்,  வெளிநாட்டு அமைச்சரும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சருமான நைஜல் ஹடில்ஸ்டனின் கருத்துக்களும் இடம்பெற்றன.

இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறைக்கு பங்களிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பிரித்தானிய -  இலங்கை சமூகத்துடன் நடாத்திய கலந்துரையாடலுடன் இந்த விஜயம் நிறைவு பெற்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மார்ச் 20

Please follow and like us:

Close