
2025, செப்டம்பர் 8 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போது அரசாங்க அறிக்கையை வழங்கியதுடன், ஜெனீவாவிற்கான தனது பயணத்தை நிறைவு செய்தார்.
உள்நாட்டுப் செயன்முறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் ஹேரத் மீண்டும் வலியுறுத்தியதுடன், அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மாற்றத்திற்காக, அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டினார்.
மேலும், வெளிப்புறமிருந்து நிர்பந்தப்படுத்தப்பட்ட பொறிமுறைககள் தொடர்பிலான, இலங்கையின் எதிர்ப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வலியுறுத்தினார்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர ஸ்தானிகர், வோல்கர் டர்க்கையும் அமைச்சர் சந்தித்ததுடன், அச்சந்திப்பில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்த கவனம் செலுத்தப்பட்டது. இது சம்பந்தமாக, அனைத்து இலங்கையர்களின் பொருளாதார, சமூக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பேரவைக்கு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ஹேரத் மேலும் பல இற்றைப்படுத்தல்களை வழங்கினார்; அவற்றை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நேரம் மற்றும் அவகாசம் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கைக்கு வருகை தரும் வாய்ப்பு மற்றும் அரசாங்கத்தின் உபசாரணைகளுக்கு உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்; மேலும் நாட்டில் நீடித்ததொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் பெற்றுள்ள வரலாற்றில் ஒருபோதும் இடம்பெற்றிராத இவ்வாய்ப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மனித உரிமைகள் பேரவையின் தலைவரான, சுவிட்சர்லாந்தின் ஜூர்க் லோபரையும் அமைச்சர் ஹேரத் சந்தித்தார்; அவர் அமைச்சரின் வருகையானது, பேரவையுடனான இலங்கையின் உயர் மட்ட அரசியல் ஈடுபாட்டின் அடையாளமென பெரிதும், வரவேற்றார். ஊடாடும் உரையாடலின் போது இலங்கைக்கு ஆதரவாகப் பேசிய, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தூதுவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் ஹேரத், அவர்களது தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு இலங்கையின் நன்றிகளைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025, செப்டம்பர் 14



