புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி

 

வெளிநாடுகளில் குறிப்பாக தமது சட்ட ரீதியான அந்தஸ்த்துக்களை மற்றும் / அல்லது தொழில் வாய்ப்புக்களை இழந்து, பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களிலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் தொடரும் என வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார். சமீபத்தில் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களில் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்களின் அதிகரித்த எண்ணிக்கையைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது காணப்படும் கணிசமான அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, கோவிட் பணிக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும். எதிர்காலத்தில் அனைத்து விமானங்களிலும் ஏறுவதற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு முன்மொழியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த மற்றும் இரண்டு அமைச்சுக்களினதும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் இன்று மாலை (மே 29, 2020) நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் இந்த அவதானிப்புக்களை மேற்கொண்டார்.

அண்மைய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, மே 27ஆந் திகதிய நிலவரப்படி, 123 நாடுகளைச் சேர்ந்த 42,522 பேர் இலங்கைக்கு மீண்டும் நாடு திரும்ப முற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில், 34,881 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவதுடன், அவர்களில் 20,893 பேர் மத்திய கிழக்கில் வசிக்கும் அதே நேரத்தில், 4,961 பேர் குறுகிய கால வீசாவையுடையவர்களும், 2,016 பேர் மாணவர்களுமாவர்.

குவைத்திலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டவர்கள் தொடர்பான முன்னேற்றங்களை நோக்குகையில், நாடு திரும்பிய 466 பேரில் 379 பேர் பொது மன்னிப்பின் மூலம் பயனடையும் நிமித்தம் ஏப்ரல் 21 - 25 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முகாம்களில் சரணடைந்து, திருப்பி அனுப்பப்படுவதற்காகக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 87 பேர் குவைத் தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்தவர்களாவர். மே 19 ஆந் திகதி குவைத் எயார்வேஸின் இரண்டு விமானங்களின் மூலமாக இவர்கள் குவைத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை நடாத்துமாறு குவைத் வெளிவிவகார அமைச்சிடம் மே 11 மற்றும் மே 14 ஆந் திகதிய இராஜதந்திரக் குறிப்புக்களினூடாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், இது சாத்தியமில்லை என்றும், கோவிட் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்ட எந்தப் பயணியும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டது. குவைத்தை விட்டு வெளியேறிய ஏனைய நாடுகளைச் சேர்ந்த எவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மேலும் குறிப்பிடப்பட்டது.

தற்போது மாலைதீவில் மிகப் பெரிய பாதிப்புக்கள் காணப்படுவதுடன், தமது பிரஜைகளை வெளியேற்றுமாறு வெளிநாட்டு அரசாங்கங்களிடம் வெளிப்படையாகக் கோரும் வகையில், மாலைதீவு அரசாங்கத்தினால் கிரேட்டர் மாலியில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாலைதீவிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்படவேண்டிய 7000 பேரில், கிட்டத்தட்ட 2000 பேர் கிரேட்டர் மாலியில் உள்ளனர். மே 14ஆந் திகதி, 284 பேர் மீள அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ஒரு சில மருத்துவ அவசரகால நிகழ்வுகளின் காரணமாக, மாலிக்கு வெளியிலிருந்து நபர்களை வெளியேற்ற சிறப்பு அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து பி.சி.ஆர். பரிசோதனை சாதனங்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை வழங்குதல் வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்த மாலைதீவு அதிகாரிகளிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆலோசனைகளை நடாத்தியுள்ளது.

கோவிட் பணிக்குழுவின் வேண்டுகோளின் பேரில், விமானப் போக்குவரத்துக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடுகளைக் கண்டறிவதற்காக, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய இடங்களிலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் விமானங்கள் அதன் பயணங்களை ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ஏனைய தலைநகரங்களுடனும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலானவற்றில், கடுமையான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய திறன்களை மேம்படுத்தும் வகையில், கோவிட் பணிக்குழுவின் தனிமைப்படுத்தல் செயற்பாட்டு நோக்கங்களுக்காக, ஹாலிஎல்ல, தங்கல்ல, தம்புள்ளை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நான்கு பயிற்சி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்த சந்திப்பின் போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்தது.

வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்களுக்கு உலர் உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதனுடாகவும், அவர்கள் இருக்கும் இடங்களிலேயே அவர்களுக்குத் தேவையான மருத்துவ அவசரநிலைகளின் போது உதவிகளை வழங்குவதனூடாகவும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியன தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கும் அதே வேளை, நாட்டிற்கு மீள அழைத்து வரப்படுவதற்கு எதிர்பார்ப்பவர்களுக்கு அதற்கான வசதிகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்.

அவ்வப்போது மாற்றமடையும் வகையில், நாட்டிற்கு மீள அழைத்து வரப்படுவதற்கான தீர்மானங்கள் பாதிக்கப்படும் தன்மையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மாணவர்களை மீள அழைத்து வருவதற்கான ஆரம்பப் பணிகளிலிருந்து தொடங்கி, மாணவர்கள், குறுகிய கால வீசாவையுடையவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என நாடு திரும்புவதற்கான தமது ஆர்வத்தைப் பதிவு செய்துள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தம்மைப் பதிவு செய்த காலவரிசையை சம்பந்தப்பட்ட தூதரகங்கள் தற்போது கண்டிப்பாக பின்பற்றுகின்றன. கிரேட்டர் மாலியில் அனைவரும் சமமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் எனக் கருதப்படும் மாலைதீவைத் தவிர, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் செயற்படும் ஏனைய 15 நிலையங்களில், புலம்பெயர்ந்தோரின் பிரிவில் யார் முன்னுரிமை பெற வேண்டும் என்பதை, தூதரகத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிநிதியுடன் கலந்தாலோசித்து, தூதரகத்தின் தலைவர் தீர்மானிப்பார். சட்டபூர்வமான அந்தஸ்த்தை அல்லது தொழில்வாய்ப்பை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், ஆவண ரீதியான ஆதாரங்களின் அடிப்படையில், மருத்துவ அவசரநிலைகளையுடைய ஒரு சில விதிவிலக்குகள் நாட்டிற்கு மீள அழைத்து வரப்படுவதற்கான விஷேடமான சந்தர்ப்பமாக கருதப்படும். இந்த நெறிமுறையை கண்டிப்பாக பின்பற்றுமாறு தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

29 மே 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close