ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமை பெற்ற 65வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐ.நா. முகவரமைப்புக்களின் தலைவர்களை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன 2020 டிசம்பர் 14ஆந் திகதியாக நேற்றைய தினம் சந்தித்தார்.
இந்த ஒன்றுகூடலில் உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, ஐ.நா. அமைப்புக்கான இலங்கையின் பங்களிப்பை மீண்டும் வலியுறுத்தியதுடன், ஐ.நா. சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில், ஐ.நா. வுடனான தனது நடுநிலையான அணிசேராக் கொள்கையின் மூலம் உலகளாவிய தெற்கின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தினார்.
இலங்கை மக்களிடமிருந்து கிடைத்துள்ள இரண்டு ஆணைகளுக்கும், மற்றும் இறையாண்மை, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை அனுபவிப்பதற்கான அவர்களின் விருப்பத்திற்குமான 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' யின் மூலமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உறுதிப்பாட்டை அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
ஐ.நா. வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை இலங்கை அடைவதில் அவர்கள் மேற்கொண்ட பங்களிப்புக்களையும், கோவிட்-19 தொற்றுநோயை நிவர்த்தி செய்வதற்கான அவர்களின் முயற்சிகளையும் அமைச்சர் குணவர்தன மேலும் வரவேற்றார். இறுதியாக, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் அவர்களின் 'காலநிலை சார்ந்த அவசரகால நிலை' க்கான இலங்கையின் ஒப்புதலையும், ஆதரவையும் அமைச்சர் குணவர்தன உறுதியளித்தார்.
ஐ.நா. வின் பரவலாக்கலை தவிர்க்கும் மற்றும் நிராயுதபாணியாக்கல் செயன்முறைகளுக்கான இலங்கையின் பங்களிப்பை ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் நினைவு கூர்ந்ததுடன், இலங்கையுடனான ஐ.நா. வின் பன்முக ஒத்துழைப்பை அதன் சிறப்பு முகவரமைப்புக்கள் மூலமாக குறித்துக் கூறினார். மனிதகுலத்தின் கூட்டுத் தார்மீக சக்தியின் மிகவும் நீடித்த அடையாளங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த ஒன்றுகூடலின் போது உரையாற்றினர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2020 டிசம்பர் 15