இலங்கைக்கு நல்கிய ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சருக்கு பாராட்டு

 இலங்கைக்கு நல்கிய ஆதரவுகளுக்காக வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சருக்கு பாராட்டு

அவுஸ்திரேலிய வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் மரைஸ் பெய்னுடன் கடந்த புதன்கிழமை (09/06) தொலைபேசி வாயிலான உரையாடலொன்றில் ஈடுபட்ட வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு அவுஸ்திரேலியா நல்கிய ஆதரவுகளுக்கு தனது ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

1,787 மில்லியன் பெறுமதியான கோவிட்-19 தொகுதியை கையளித்தமை; அத்தியாவசிய கோவிட்-19 விநியோகங்களை யுனிசெப் மூலம் நன்கொடையளித்தமை; மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிமை போன்ற அவுஸ்திரேலியாவின் உதவியை வெளிநாட்டு அமைச்சர் வரவேற்றார். மேலும், 2021 ஜூன் 04ஆந் திகதி ரோயல் அவுஸ்திரேலிய விமானம் மூலம் விநியோகிக்கப்பட்டு சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்ட 9.8 மீற்றர் அளவுடைய முகக் கவசங்களையும், 3,200 ஆடைக் கவசங்களையும் வரவேற்றார்.

அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவை வெளிநாட்டு அமைச்சர் கோரியதுடன், அதனை சாதகமான முறையில் பரிசீலனை செயவதற்கு அவுஸ்திரேலிய அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொருத்தமான திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். இலங்கையின் தேசிய அபிவிருத்தி முயற்சிகளில் அவுஸ்திரேலிய அபிவிருத்தி உதவி ஆற்றியுள்ள நேர்மறையான வகிபாகத்தை ஒப்புக் கொண்ட அமைச்சர் குணவர்தன, இந்த முக்கியமான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இலங்கைத் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் இலங்கைக் கடலில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணிப்பதற்காக இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் முன்வந்தார்.

உரையாடலின் போது, இயற்கை உரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்திற்கு ஆதரவளிக்குமாறான தனது அதிமேதகு ஜனாதிபதியின் கோரிக்கையை அமைச்சர் குணவர்தன தெரிவித்ததுடன், அவுஸ்திரேலிய ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலமாக அவுஸ்திரேலியா அந்தத் துறையில் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என அமைச்சர் பெய்ன் பதிலளித்தார்.

அவுஸ்திரேலியாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 58 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான திட்டங்கள் உட்பட பல இருதரப்பு மற்றும் பல்தரப்பு விடயங்கள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர். பொதுநலவாய அமைப்புக்கள் மற்றும் ஆசிய பிராந்திய அமைப்புக்களான இந்து சமுத்திர விளிம்பு சங்கம் மற்றும் பாலி செயன்முறை ஆகியவற்றில் அவுஸ்திரேலியா இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என அமைச்சர் பெய்ன் அளித்த வாக்குறுதியை இலங்கை வெளிநாட்டு அமைச்சர் குறிப்பாகப் பாராட்டினார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூன் 10

--

Please follow and like us:

Close