கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், 27 டிசம்பர் 2019, வெள்ளிக்கிழமை அன்று, “இந்திய - இலங்கை பொருளாதாரக் கூட்டுறவு” என்ற கருப்பொருளின் கீழ், இந்திய பொருளாதார கற்கைகள் நிறுவகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவை, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆரம்பித்து வைத்தார்.
பாரம்பரிய முறையில் விளக்கேற்றி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்த பின்னர் வெளிநாட்டு அமைச்சர் குணவர்த்தன அவர்கள், இந்தியப் பொருளாதார கற்கைகள் நிறுவகத்தின் பட்டதாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். புதுடெல்லியைத் தளமாகக்கொண்ட இந்நிறுவகமானது, வருடாந்தம் உலகெங்குமுள்ள பல நாடுகளில் ஒன்றைத் தெரிவு செய்து தனது முக்கிய நிகழ்வுகளை நடாத்தும். அந்தவகையில் இந்த வருடம் இந்நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக, இந்தியா, தமிழ்நாட்டு சட்டசபையின் கூட்டுறவு அமைச்சர் திரு செல்லூர் கே. ராஜூ அவர்களுடன், மிண்டனோவா பிரான்ஸ் இளவரசி, இளவரசி இஸபெல் லஃபோர்க், இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் அனிலா சிங்க் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நீர் மின்சார சக்தி கூட்டுறவு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு. யோகேந்திர பிரசாத் மற்றும் இன்னும் பலரும் கலந்துகொண்டனர்.
பொருளாதார கற்கைகள் நிறுவகமானது, இந்தியப் பொருளாதாரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான பாரம்பரிய முக்கியத்துவத்தினைப் பற்றி ஆராய்வதற்காகவும் கலந்துரையாடுவதற்காகவுமென, பொருளாதார நிபுணர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரை உள்ளடங்கிய குழு ஒன்றினால் 1980 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் நிகழ்வானது, வணிகக் கூட்டாண்மை நிகழ்வு ஒன்றினைத் தொடர்ந்து இடம்பெற்றது.


