சார்க் அமைச்சர்கள் குழுவின் முறைசாரா கூட்டத்திற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை

சார்க் அமைச்சர்கள் குழுவின் முறைசாரா கூட்டத்திற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை

2020 செப்டம்பர் 24 ஆந் திகதி இடம்பெற்ற எட்டு உறுப்பினர்களைக் கொண்ட தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) அமைச்சர்கள் குழுவின் முறைசாரா கூட்டத்திற்கான இலங்கை தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கினார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் இணைப்பக்க நிகழ்வாக பாரம்பரியமாக நடைபெறும் இந்த வருடாந்த நிகழ்வானது, கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த வருடம் இணைய மெய்நிகர் முறையில் இடம்பெற்றது.

இந்த வருடம் தெற்காசியாவின் பொருளாதாரமானது 4.8% ஆக குறைவடைவதாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளமையின் காரணமாக, கோவிட்-19 தொற்றுநோயின் பாதகமான தாக்கத்தை தணிப்பதற்காக ஒருங்கிணைந்த வகையில், ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இந்த முறைசாரா கூட்டத்தின் போது அமைச்சர் குணவர்தன சுட்டிக் காட்டினார். தெற்காசியாவின் பொருளாதாரக் கண்ணோட்டத்தை மீளாய்வு செய்தல், பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புக்களை கண்டறிதல், வணிகங்களை புத்துயிர் பெறச் செய்தல், உற்பத்தியை அதிகரிப்பதற்கான முக்கியத்துவம் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

பிராந்திய ஒத்துழைப்பை முன்னணியில் வைத்திருப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'செழிப்பு மற்றும் மகத்துவத்தின் நோக்குகள்' என்ற தேசியக் கொள்கைக் கட்டமைப்பானது, ஆசிய அண்டை நாடுகளின் மீது மேம்பட்ட கவனத்தை செலுத்தி, அணிசேராத, நடுநிலையான மற்றும் நட்புறவான வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதாக அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றில் ஒரு வினையூக்கியாக மாறுவதற்கான ஆற்றல் வளமாக சார்க் அமைந்துள்ளது. தெற்காசியாவின் பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் போன்ற மென்மையான திட்டங்களில் ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துதல் அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்திற்கு நேபாளத்தின் வெளிநாட்டு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி தலைமை தாங்கியதுடன், இதற்கான ஏற்பாட்டு வசதிகள் காத்மாண்டுவில் உள்ள சார்க் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட சார்க்கின் பொதுச்செயலாளர் எசல வீரக்கோன் அவர்களும் இந்த முறைசாரா கூட்டத்தில் உரையாற்றினார். வெளிநாட்டு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

24 செப்டம்பர் 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close