இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிலவும் பன்முக உறவின் பல பகுதிகளை உள்ளடக்கி, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் பொம்பியோ ஆகியோர் இன்று (2020 அக்டோபர் 28) வெளிநாட்டு அமைச்சில் வைத்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் காலையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தூதுக்குழுவினர் மட்டத்திலான இந்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் போது, உறவுகளைத் தாபிக்கின்ற பொருளாதார, அரசியல், காவல் மற்றும் பாதுகாப்புத் துறைகள் குறித்த கருத்துக்களை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டதுடன், தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒப்புக் கொண்டனர். தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, வருடாந்த பங்காண்மை உரையாடலை ஆரம்ப, பரஸ்பரம் வசதியான கால கட்டத்தில் கூட்டுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் ஒப்பந்தம் (TIFA) மற்றும் அமெரிக்க ஜி.எஸ்.பி. வசதியைத் திடப்படுத்துவதற்கும் மேலதிகமாக, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல முயற்சிகளில் முன்னேற்றமடைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போதுள்ள மற்றும் பிந்தைய கோவிட்-19 பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக கூட்டாக பணியாற்றுவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். பரஸ்பர ஆர்வத்தின் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், மற்றும் நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்கொள்ளுதல் தொடர்பான இலங்கையின் முன்னேற்றம் குறித்து விஜயம் மேற்கொண்ட இராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன விளக்கினார்.
இலங்கைக்கான தனது விஜயத்தை கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நிறைவு செய்த இராஜாங்க செயலாளர் மைக்கேல் பொம்பியோ, அங்கு 2019 ஏப்ரல் ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களில் மரணித்தவர்களை நினைவுகூரும் வகையில், தனது பாரியார் திருமதி. சூசன் பொம்பியோவுடன் இணைந்து மலர்வளையமொன்றை வைத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார். அமெரிக்க இராஜாங்க செயலாளரால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய மூன்று நாடுகளை உள்ளடக்கிய ஆசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்த விஜயம் இடம்பெற்றது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
28 அக்டோபர் 2020