ஹைட்டியில் பணிபுரியும் இலங்கையர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கியூபாவின் மருத்துவக் குழுவொன்றை ஹைட்டி குடியரசிற்கு அனுப்பியதன் மூலமாக வழங்கப்பட்ட ஆதரவுகளுக்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது ஆழ்ந்த பாராட்டுகளை கியூப அரசாங்கத்துக்குத் தெரிவித்தார். இலங்கைக்கான கியூபத் தூதுவர் ஜுவானா எலெனா ராமோஸ் ரொட்ரிகஸுடன் மே 12, செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் இந்தப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஹைட்டியிலுள்ள 100 க்கும் மேற்பட்ட ஆடைத் துறை ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட வெளிப்படையான வேண்டுகோளின் பேரில் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு கியூப அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டது.
மே 07 ஆந் திகதி ஹைட்டியை வந்தடைந்த குறித்த மருத்துவக் குழு, கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த நடைமுறைகள், வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கான முதன்மையான பராமரிப்பு போன்றவை குறித்து இலங்கை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். இதுதொடர்பாக, அமைச்சர் குணவர்தன கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் புருனோ ரொட்ரிகஸ் பர்ரில்லாவுக்கு கொழும்பிலுள்ள கியூபத் தூதுவர் மூலமாக மீண்டுமொறுமுறை தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் கியூபாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவப் பொருட்களை கியூப அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதில் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் உதவி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான எதிர்கால உத்திகள் குறித்தும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கலந்துரையாடினார். நாட்டில் நடைமுறையிலுள்ள பயனுள்ள சுகாதார முறைமைகளைப் பயன்படுத்தி, சரியான நேரத்தில் மற்றும் மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் மூலமாக செயற்படுத்தப்பட்ட வெற்றிகரமான கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக தூதுவர் ரொட்ரிகஸ் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டினார்.
கியூபா மற்றும் கரிபியன் பிராந்தியத்தின் முன்னேற்றங்கள், கரிபியன் சமூகத்தின் நடவடிக்கைகள் (CARICOM) மற்றும் கியூபா, ஐரோப்பா மற்றும் ஆசியப் பிராந்தியங்களுக்கிடையிலான இணைப்பு குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை கியூபத் தூதுவர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சருக்கு வழங்கினார். சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து இருதரப்பு மற்றும் பல்தரப்புத் துறைகளில் இலங்கைக்கும் கியூபாவிற்குமிடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பு குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
12 மே 2020