கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையினருக்கு இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த விளக்கமளிக்கும் சந்திப்பொன்றை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2023 ஏப்ரல் 10ஆந் திகதி, திங்கட்கிழமை நடாத்தினார். வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஜனாதிபதிப் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சந்திப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், பொருளாதார மீட்சிக்காக இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு சர்வதேச சமூகத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, இது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் விளக்கினார். சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்குவிப்பதற்காக, நாட்டின் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், நாடுகளின் பயண ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
2022 டிசம்பர் மற்றும் 2023 ஜனவரியில் ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியமை மற்றும் ஜனாதிபதியின் தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை நியமித்தல் உள்ளிட்ட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். 13வது திருத்தம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அவர் விளக்கமளித்தார். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை அமைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்த புதுப்பிப்பை அவர் வழங்கியதுடன், நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஆய்வு செய்வதற்காக மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணி விஜயத்தை எளிதாக்கியமைக்காக தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கித் திட்டங்களின் பின்னணியில் அரசாங்கத்தின் கட்டமைப்புச் சீர்திருத்த செயன்முறைகள் தொடர்பான அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதிப் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க விளக்கியதுடன், கடன் நிலைத்தன்மை, நிதிக் கண்காணிப்பு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான சமூகப் பாதுகாப்பு, நல்ல நிர்வாகம் மற்றும் ஊழலை நிவர்த்தி செய்தல் போன்றவற்றிற்கு இடையே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிததும் சுட்டிக்காட்டினார்.
உலக காலாந்தர மீளாய்வின் 4 வது சுழற்சி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் 6 வது உலக காலாந்தர மீளாய்வு மற்றும் மனித உரிமைகள் பேரவையின் 52 வது அமர்வு உட்பட ஐ.நா. பொறிமுறைகளுடன் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டை வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன சுட்டிக் காட்டினார். ஏப்ரல் 2022 இல் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான குழுவிடம் இலங்கை தனது 9 வது காலாந்தர அறிக்கையை சமர்ப்பித்ததுடன், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடையே ஆலோசனை செயன்முறையைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அண்மையில் நிறுவப்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுடன் முன்னெச்சரிக்கையுடன் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளையும் வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார்.
விளக்கமளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, முதலீட்டு ஊக்குவிப்பு, நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு உட்பட பல சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து இராஜதந்திரக் குழு உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கையின் தொடர்புடைய அபிவிருத்திகள் குறித்து இராஜதந்திரப் படையினருக்கு தொடர்ந்தும் விளக்கங்களை வழங்கியமைக்காக அமைச்சர் சப்ரிக்கு அவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஏப்ரல் 10