வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குணவர்தன அவர்களின் தலைமையிலான குழுவில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள், உலக சுகாதாரத் தாபனத்தின் வதிவிடப் பிரதிநிதி, இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு, குடிவரவுத் திணைக்களம், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் இலங்கை ராணுவ அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை மாணவர்களை வுஹானில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றுவது குறித்த இலங்கையின் தயார்நிலை மற்றும் அதன் வெற்றிகரமான பெறுபேறு குறித்து வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தனது ஆரம்ப உரையில் தெரிவித்தார். இந்த நோக்கத்திற்காக சீன அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு செயலாளர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட வகையில், வைரஸைப் பற்றிய ஆதாரமற்ற அச்சத்தின் காரணமாக எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜைக்கும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை தொடர்பில் அவ்வப்போது கூறப்படும் சில சம்பவங்கள் நாட்டின் பொதுவான நிலைமையை பிரதிபலிக்கவில்லை என வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க குறிப்பிட்டார்.
கோவிட் - 19 இன் அச்சுறுத்தல் சர்வதேச அக்கறைக்கான பொது சுகாதார அவசர நிலையை எட்டியுள்ளதுடன், இதன் விளைவாக, உள்நாட்டு சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதற்கான தீவிரமான திட்டத்தை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். ஆரம்பக் கட்டமாக, நாடு முழுவதும் 17 வைத்தியசாலைகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கோவிட் - 19 தொற்றுநோயைக் கையாள்வதற்கு ஏற்ற வகையில் அவற்றுக்கு முறையாக சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நிலைமை பரவும் வகையில் இருப்பதால், கோவிட் - 19 இன் வரைவிலக்கணமும் மீள விபரிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய நிலவரப்படி, ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வைரஸை சாத்தியமான வகையில் கொண்டு செல்பவர்களாக கருதப்படுகின்றார்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கூறிய மூன்று நாடுகளிலிருந்து அல்லது அதன் வழியாக பயணிப்பவர்களை தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தனிமைப்படுத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால், திட்டங்களை செயற்படுத்துவதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
உலகெங்கிலுமுள்ள நிலைமையின் பாரதூரத் தன்மையை எடுத்துக்காட்டிய உலக சுகாதாரத் தாபனத்தின் வதிவிடப் பிரதிநிதி வைத்தியர் ரசியா நாராயண் பெண்ட்சே, இலங்கையில் கோவிட் - 19 பரவுவதை நிர்வகிப்பதற்காக ஒருங்கிணைந்த அரசாங்கம் மற்றும் சமுதாய அணுகுமுறையொன்று காலத்தின் தேவையாக உள்ளதாக சுட்டிக்காட்டினார். எந்தவொரு பாதகமான சூழ்நிலையையும் மாற்றுவதற்கான முகவர்களுக்கிடையேயான கூட்டு அணுகுமுறையொன்று இந்த நேரத்தில் முக்கியமானது என அவர் மேலும் குறிப்பிட்டார். மிகவும் தேவையான அரசியல் விருப்பத்தையும், சவால்களைத் தீர்ப்பதில் இதுவரை நடைமுறையில் உள்ள பல்துறை ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையையும் தன்னால் தெளிவாக அவதானிக்க முடிவதாக வைத்தியர் பெண்ட்சே தெரிவித்தார். வெளிநாட்டு உறவுகள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் குடிவரவு அதிகாரிகளின் வகிபாகங்களைப் பாராட்டிய பிரதிநிதி, பொது மக்களுக்கு கல்வியறிவூட்டுதல், கண்காணிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ஆயத்த நிலையை வலுப்படுத்துதல் ஆகியவை வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முக்கிய அம்சங்களாகும் என மேலும் குறிப்பிட்டார்.