தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2023 மார்ச் 21-25 வரை தென்னாபிரிக்காவிற்கு தொழில்முறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் சப்ரியுடன் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் சென்றுள்ளார்.
உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச அரங்குகள் உட்பட பல தளங்களில் உறுதியாகக் கூறப்பட்ட இலங்கையின் கொள்கைக்கு இணங்க இந்த விஜயம் அமைந்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவினால் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தக் கருத்தை செயற்படுத்துவதற்கும், கலந்துரையாடல்களைத் தொடங்குவதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்டத்தை உருவாக்குவதற்கும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் நீதி அமைச்சருக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
இந்த செயன்முறைக்கு ஆதரவாக, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதில் தென்னாபிரிக்காவின் அனுபவம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யுமாறு தென்னாபிரிக்க அரசாங்கம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 மார்ச் 22