2023 பெப்ரவரி 15 முதல் 18 வரை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்குப் பொறுப்பான ஜேர்மன் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினர் கலாநிதி பீட்டர் ராம்சௌரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை மேலும் விரிவுபடுத்துவதை மையமாகக் கொண்டதாக ஜேர்மன் தூதுக்குழுவுடனான கலந்துரையாடல்கள் அமைந்திருந்ததுடன், குறிப்பாக இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு நினைவு தினம் இந்த ஆண்டு நினைவுகூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையுடனான ஜேர்மனியின் நீண்டகால அபிவிருத்தி ஒத்துழைப்புப் பங்காண்மையைப் பாராட்டிய அமைச்சர் சப்ரி, நாடு பூராகவும் அமைந்துள்ள ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் தொழில் பயிற்சியை விரிவுபடுத்துவதன் மூலமான பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை எடுத்துரைத்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பல திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை வரவேற்றதுடன், காலியில் உள்ள 'ஹெல்முட் கோல்' மகப்பேறு மருத்துவமனையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தார். வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்ட நாட்டின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜேர்மன் தரப்பினருக்கு விளக்கினார்.
கலாநிதி ராம்சௌர் உடன் இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் மற்றும் முனிச் டாக்மர் வொர்ல் இல் உள்ள இலங்கைக்கான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கௌரவத் தூதுவரும் கலந்துகொண்டனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கலாநிதி ராம்சௌர் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இலங்கைக்கு விஜயம் செய்த தூதுவர் மற்றும் தூதுக்குழுவினர் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவையும் சந்தித்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 பிப்ரவரி 21