இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக கெய்ரோவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக கெய்ரோவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, எகிப்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் பத்ர் அப்துலேட்டியின் அழைப்பின் பேரில் எகிப்துக்கு 2024 ஆகஸ்ட் 7-11 வரையிலான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது சக வெளியுறவு அமைச்சர் கலாநிதி பத்ர் அப்துலேட்டியுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்தார்.  வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, கலாச்சாரம், தொல்பொருளியல், கடல் போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் நெருங்கிய தொடர்புகளை வளர்ப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். இரு அமைச்சர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பகிரப்பட்ட ஆர்வத்தைப் பற்றி கலந்துரையாடினர்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் (BIDTI) மற்றும் எகிப்தின் வெளியுறவு அமைச்சின் இராஜதந்திர ஆய்வுகளுக்கான நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விசேட நிகழ்வில், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி எகிப்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் பத்ர் அப்துலேட்டியுடன் இணைந்து கொண்டார். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர பயிற்சி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைச்சர் சப்ரி, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஹசன் எல் கதீப் மற்றும் சுதந்திர வலயங்களுக்கான  மற்றும் முதலீட்டிற்கான அதிகார சபையின் (GAFI) தலைவர் ஆகியோருடன் பரஸ்பர ஆர்வமுள்ள முக்கியத்துறைகள், வர்த்தகப் பிரதிநிதிகளின் பரிமாற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் வர்த்தக ஆலோசனைகள் பொறிமுறையை முன்கூட்டியே கூட்டுதல் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இவ்வுரையாடல்களின் போது, ​​எகிப்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையின் தனியார் துறை முதலீடுகளை எகிப்தியத் தரப்பு பாராட்டியதுடன், எகிப்தில் இலங்கையின் முதலீடுகளை அதிகரிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதை உறுதி செய்தனர்.
இவ்விஜயத்தின் போது, ​​அமைச்சர் அலி சப்ரி, எகிப்தின் இஸ்லாமிய மதத்தலைவர் வணக்கத்துக்குரிய கலாநிதி    ஷவ்கி இப்ராஹிம் அல்லாம் அவர்களைச் சந்தித்து,   இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான மத ஒத்துழைப்பு, கலாசார இடைத்தொடர்புகள், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுதல், அமைதியான சகவாழ்வை மேம்படுத்துதல் மற்றும் மக்களிடையே நெருக்கமான உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பான விடயங்களைப் பரிமாறிக் கொண்டார்.
இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக எகிப்திய வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் கெய்ரோ வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியும் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான, குறிப்பாக விவசாயம், ஆடைக்கைத்தொழில், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகளை கட்டவிழ்த்து அதன்மூலம் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு இந்நிகழ்வு வழிவகுத்தது. இரு நாடுகளின் பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழுமைக்காக, இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய எகிப்திய வர்த்தக சமூகத்தை நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுப்பதற்காக, வெளியுறவு அமைச்சர் சப்ரி இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
அமைச்சர், தூதுவரும் எகிப்திய வெளியுறவு மன்றத் (ECFA) தலைவருமான மொஹமட் அல்-ஓராபி அவர்களையும், குழு உறுப்பினர்களையும் சந்தித்து, பிராந்தியத்தின் வளர்ச்சிகள் மற்றும் எகிப்திய வெளியுறவு மன்றத்துடனான சாத்தியப்பாடுடைய ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
 2024 ஆகஸ்ட் 13

 

Please follow and like us:

Close