வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்பு

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்பு

வெளிச்செல்லும் வெளிநாட்டு அமைச்சரும் புதிய கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, பெண்கள் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி, பாலர் பாடசாலை மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் ஏனைய அதிகாரிகள் பங்குபற்றிய எளிமையான வைபவத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (2021 ஆகஸ்ட் 18) தனது கடமைகளை அமைச்சில் வைத்து பொறுப்பேற்றார். பெல்லன்வில ராஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதி  வணக்கத்திற்குரிய கலாநிதி. பெல்லன்வில தம்மரத்தன நாயக்க தேரர் இந்த நிகழ்வில் ஆசிகளை வழங்கினார்.

அதன் பின்னர், உள்வரும் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் வெளிச்செல்லும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆககிய இருவரும் அமைச்சின் சிரேஷ்ட ஊழியர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாட்டு அமைச்சிற்கு வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக வெளிச்செல்லும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை அவர் பாராட்டிய அதே வேளை, வெளிநாட்டு அமைச்சின் அனைத்து நடவடிக்கைகளிலும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின்  உள்ளார்ந்த சுயமரியாதை மற்றும் கௌரவம் பாதிக்கப்படாதிருப்பதனை உறுதிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

புதிய அமைச்சரை வரவேற்ற பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும்  வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, அவரது வழிகாட்டுதலின் கீழ் வெளிநாட்டு அமைச்சின் ஆணையை தொடர்ந்தும் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கிய தொலைநோக்கு மிகுந்த தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலுக்காக வெளிச்செல்லும் அமைச்சருக்கு இராஜாங்க அமைச்சர் பாலசூரிய மற்றும் செயலாளர் கொலம்பகே ஆகிய இருவரும் நன்றிகளைத் தெரிவித்தனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 ஆகஸ்ட் 18

 

 

Please follow and like us:

Close