சார்க் அமைப்பின் அடுத்த பொதுச்செயலாளராக எசல வீரக்கோன் அங்கீகரிக்கப்பட்டார்

சார்க் அமைப்பின் அடுத்த பொதுச்செயலாளராக எசல வீரக்கோன் அங்கீகரிக்கப்பட்டார்

Mr. Esala Weerakoon

 

கடந்த வாரம் நியூயோர்க்கில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) அமைச்சர்கள் குழுவின் முறைசாரா கூட்டத்தின் போது, 2020 மார்ச் 01 ஆந் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், சார்க் அமைப்பின் 14 வது பொதுச்செயலாளராக முன்னாள் வெளிவிவகார செயலாளரும், சிரேஷ்ட தொழில்முறை இராஜதந்திரியுமான திரு. எசல வீரக்கோன் அவர்களை நியமனம் செய்வதற்கான முன்மொழிவிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. திரு. வீரக்கோன், தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக பணியாற்றுகின்றார்.

இந்த கூட்டத்திற்கு நேபாள வெளிவிவகார அமைச்சர் பிரதீப் குமார் க்யாவலி தலைமை தாங்கியதுடன், ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சலாஹூத்தீன் ரப்பானி, பூட்டான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி டன்டி டோர்ஜி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமண்யம் ஜெய்சங்கர், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி, பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்டி. ஷாஹ்ரியர் ஆலம் மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வாக 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, அடுத்த சார்க் பொதுச்செயலாளரின் அங்கீகாரத்தை வரவேற்றதோடு முழு மனதளவிலான ஈடுபாட்டுடன் சார்க் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்த சார்க் வெளிவிவகார அமைச்சர்கள், மேம்படுத்தப்பட்ட வர்த்தகம், முதலீடு, இணைப்பு, சுற்றுலா, கலாச்சாரம், பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினர்.

வெளிவிவகார செயலாளர், முறைசாரா கூட்டத்தை கூட்டியமைக்காக தலைவரான நேபாள வெளிவிவகார அமைச்சர் பிரதீப் குமார் க்யாவலி அவர்களை பாராட்டியதுடன்,  மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை சங்கத்தின் முன் கோடிட்டுக் காட்டியமைக்காக தற்போதைய செயலாளர் நாயகம் அம்ஜத் ஹூசைன் பி. சியல் அவர்களை பாராட்டினார். செயலாளர் நாயகமாக இருந்த காலத்தில் பிராந்தியத்தின் நலன்களை மேம்படுத்தியமைக்காக திரு. சியல் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

சார்க் பிராந்தியமானது அதிகம் பயன்படுத்தப்படாத மனித மற்றும் இயற்கை வளங்களின் திறன்களைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்திய வெளிவிவகார செயலாளர், பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், சார்க் அமைப்புடனான ஈடுபாடானது, இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் அதிகம் முன்னுரிமை மிக்கதாக விளங்குவதாக தெரிவித்தார். பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு, இணைப்பு, காவல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதிலான பிராந்தியத்தின் அதிகமான ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றார்.

அண்மையில் ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்பின் போது இலங்கை அனுபவித்ததைப் போல, பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதம் ஆகியன பிராந்தியத்தின் கூட்டு அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது என்பதை சுட்டிக்காட்டிய வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க, சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாதத்தின் துன்பத்தால் தெற்காசியா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். சட்ட அமுலாக்க முகவர்கள் மற்றும் உரையாடலுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மூலம், பயங்கரவாதத்தின் நாடுகடந்த அச்சுறுத்தலை கூட்டிணைந்த முறையொன்றில் எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் முயற்சிக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கலைகள் மூலம் மக்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் பிராந்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் நோக்கில், சார்க் அமைப்பின் கலாச்சாரத்திற்கான நிகழ்ச்சி நிரலுக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. சார்க் அமைப்பிற்கான கலாச்சார மையத்தின் புதிய கலையியல் கட்டடத் தொகுதி, இலங்கையின் மாத்தறையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் இதுவரை 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. உறுப்பு நாடுகளுக்கு இடையில் தெற்காசியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட வகையில், சார்க் கலாச்சார மையம் உறுப்பு நாடுகளுடன் பல பங்கேற்பு மற்றும் பங்கேற்பற்ற செயற்பாடுகளை ஏற்பாடு செய்கின்றது.

 

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம்
நியூயோர்க்
2019 அக்டோபர் 04

 

Photo - 01

 Photo - 02

 Photo - 03

Please follow and like us:

Close