பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின், 27 வருட பயணத்தின் வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2024, மே 20 அன்று, பிம்ஸ்டெக் சாசனம் நடைமுறைக்கு வருவதை ஏற்பதில் இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது.
பிம்ஸ்டெக் சாசன அமுலாக்கத்தின் மூலம், இவ்வமைப்புக்கான சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பை நிறுவுகின்றமை முக்கியக்கட்ட வளர்ச்சியாகக் கருதப்படுவதுடன், இது பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், வங்காள விரிகுடா பிராந்தியத்திற்குள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சாசனம் நடைமுறைக்கு வந்ததன் மூலம், அனைத்து உறுப்பு நாடுகளும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. வங்காள விரிகுடா பிராந்தியத்திற்குள் இடைத்தொடர்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 மே 31