டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் 2023 பெப்ரவரி 04ஆந் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜப்பானின் முன்னாள் பிரதமர் யாசுவோ ஃபுகுடா, ஜப்பான் - இலங்கை சங்கத்தின் கௌரவத் தலைவர் யோஷிடகா சகுரடா, பிரதிநிதிகள் சபை உறுப்பினரும், டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளுக்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சரும், ஜப்பான் - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் கழகத்தின் நிறைவேற்றுச் செயலாளருமான நோபுமிட்சு ஹயாஷி, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின் ஆளுநரும், இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பான ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் பிரதிநிதியுமான யசுஷி அகாஷி உட்பட உயர்மட்ட பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் முறையான விழாவை ரெய்யுகாய் கோட்டானி மண்டபத்தில் நடாத்தியது.
இந்நிகழ்வில் ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் தூதுவர்கள், தெற்காசிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஜப்பானில் உள்ள இலங்கை சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட ஜப்பான் அரசாங்கம், இராஜதந்திர சமூகம், கூட்டுத்தாபன நிறுவனங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 400 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதங்களின் சமய வழிபாடுகள் நடாத்தப்பட்டன. தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செய்திகள் மூன்று மொழிகளிலும் வாசிக்கப்பட்டதுடன், பிரதமர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் செய்திகள் தூதரகத்தின் சமூக ஊடகத் தளங்கள் மூலம் வெளியிடப்பட்டன.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தூதுவர் ரொட்னி பெரேரா, 71 வருடங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகளை சம்பிரதாயமாக ஸ்தாபிப்பதற்கு முன்னரும் கூட இருந்த உயர்மட்ட ஒத்துழைப்பு மற்றும் பலமான மக்களிடையேயான உறவுகளால் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பன்முக உறவுமுறை குறித்து பேசினார். இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் ஜப்பானிய வர்த்தக ஒத்துழைப்புக்கள் குறித்தும் தூதுவர் கவனம் செலுத்தினார். மேலும் ஜப்பானின் புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்கள் இலங்கையின் பொருளாதார ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டார். இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளின் போது ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு உதவுவதற்கு ஆற்றிய சாதகமான பங்கைப் பாராட்டிய தூதுவர், இரு நாடுகளின் பொது மற்றும் தனியார் துறைகளின் உயர்மட்ட விஜயங்கள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் உள்ள உறவுகள் மேலும் வலுவடையும் என நம்பிக்கை வெளியிட்டார். ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சபையின் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளையும் அவர் அங்கீகரித்ததோடு, எஸ்.எல்.பி.சி.ஜே. ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்வுக்கு அவர்கள் வழங்கிய அனுசரணையைப் பாராட்டினார்.
முன்னாள் பிரதமர் யாசுவோ ஃபுகுடா தனது உரையில், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தினால் ஜனாதிபதியின் அறிவு மற்றும் சர்வதேச சமூகத்தில் அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் மூலம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என நம்பிக்கை வெளியிட்டார். இந்த இக்கட்டான தருணத்தில் ஜப்பானில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பரந்த அனுபவமுள்ள சிரேஷ்ட இராஜதந்திரி ஒருவரை தூதுவராக நியமித்ததையும் அவர் பாராட்டினார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர மரியாதைக்குரிய மற்றும் நன்மை பயக்கும் பொருளாதாரப் பங்காளித்துவத்தை ஏற்படுத்துவதற்கும் இரு நாடுகளினதும் பொது மற்றும் தனியார் துறைகளை கைகோர்க்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
1951 ஆம் ஆண்டு சன்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆற்றிய உரையை நினைவு கூர்ந்த ஜப்பான் - இலங்கை சங்கத்தின் கௌரவத் தலைவர் யோஷிடகா சகுரடா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஜப்பானின் போராட்டங்களில் இலங்கை ஜப்பானுக்கு ஆதரவாக நின்றதைப் போன்று, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளின் போது, இலங்கைக்கு உண்மையான பங்காளியாக இருப்பதற்கான ஜப்பானின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். கொழும்பில் பெப்ரவரி 04ஆந் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாக்களில் ஜப்பானின் இராஜாங்க அமைச்சர் ஷூன்சுகே டேக்கி கலந்துகொண்டமையால், 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானில் இருந்து முதலாவது அரசியல் மட்ட விஜயம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
71 வருட இருதரப்பு உறவுகளின் பயணத்தை விளக்கும் சிறிய காணொளியும் நிகழ்வில் திரையிடப்பட்டது. ஜப்பானில் வசிக்கும் கலாசாரக் கலைஞர்கள் இலங்கையின் அனைத்து இன சமூகங்களின் பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில், நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தி கூடியிருந்தவர்களை மகிழ்வித்தனர். பல ஜப்பானிய கலைஞர்கள் இலங்கையின் பாரம்பரியப் பாடல்களான 'டான்னோ புடுங்கே' மற்றும் 'சகுரா மல் பிபிலா' போன்ற இரு நாடுகளின் இசை மரபுகளை இணைத்துப் பாடினர். இந்நிகழ்வில் தேயிலை, கறுவா மற்றும் சுவையூட்டிப் பொருட்கள், ஆரோக்கியம், ஆயுர்வேதம் மற்றும் சுற்றுலா உட்பட இலங்கையின் விவசாயப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இது நாட்டின் பல்வேறு திறன்களையும் வளமான கவர்ச்சியையும் வெளிப்படுத்தியது. ஜப்பான் மற்றும் இலங்கையின் நலன் விரும்பிகள் மற்றும் அனுசரணையாளர்களின் ஆதரவுடன் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவின் இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாகவும், வர்த்தகம், முதலீடு, கடல்சார் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மேம்படுத்தும் நோக்கில், மினி ஸ்ரீலங்கா திருவிழாக்கள் போன்ற பல நிகழ்வுகள் இலங்கை சமூகத்தின் ஆதரவுடன் ஜப்பான் முழுவதும் ஆண்டு முழுவதும் வரிசையாக நடாத்தப்பட்டு வருகின்றன.
இலங்கைத் தூதரகம்,
டோக்கியோ
2023 பிப்ரவரி 09