ஆட்கடத்தலுக்கு எதிராக போராடுதல் தொடர்பில் வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்களில் இணைந்துள்ள உத்தியோகத்தர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு ஆன்-லைன் பயிற்சி மொடியூல் 2018 ஒக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. குடியேற்றங்கள் பற்றிய சர்வதேச அமைப்பால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட இந்த பாடநெறியானது பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தின் இலத்திரனியல் பயிற்சி பிரிவின் ஒரு பாகமாக அமைந்துள்ளது. இந்த முன்னெடுப்புக்கான நிதி உதவியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த பயிற்சி மொடியூலை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், ஆட்கடத்தல் என்பது 'பொது மனிதகுலம் பற்றிய எமது உணர்வின் ஒரு வடுவாகும் என்பதுடன் மனிதர்களுக்கான ஒரு அநீதியும் ஆகும்' என்று குறிப்பிட்டார். 'ஆட்கடத்தலானது மக்களின் ஆரோக்கியத்தை ஆபத்துக்கு உட்படுத்துவதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பல குற்றச்செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளது' என்றும் ஆட்கடத்தலை முறியடித்தல் பற்றிய ஆரம்ப செயற்பாடுகளானவை ஆட்கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களை கண்டுபிடிக்கும் திறமையுடன் இருப்பதில் தங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த வகையில், இந்த மொடியூலானது, ஆட்கடத்தலுக்கு உட்படும் சாத்தியமுள்ளவர்களை இனங்காணல், அவர்களுக்கு உதவியளித்தல் மற்றும் பாதுகாப்பளித்தல் தொடர்பில் வெளிநாட்டில் நிலைகொண்டுள்ள உத்தியோகத்தர்களை முறையாக தயார்நிலையில் வைப்பதற்கான உதவியை அவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ஆட்கடத்தலுக்கு உட்படும் சாத்தியமுள்ளவர்கள் அதனை எதிர்கொள்ளும் வேளையில், அவர்களை வினைத்திறனாகவும் உணர்வுபூர்வமாகவும் கையாள்வதற்கான அடிப்படை திறன்களை பெற்றுக்கொள்வதற்கு இந்த பயிற்சி வழிசமைக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும், கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கான பங்காண்மைகளை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைவரும், நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருமான டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி அவர்கள் ஆட்கடத்தல் முறியடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய அரசாங்க முகவராண்மைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆட்கடத்தலுக்கு எதிராக 2010ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட தேசிய செயலணியானது ஆரம்பத்தில் இருந்தே பயனுறுதியான வகையில் முகவராண்மைகளுக்கு இடையிலான பொறிமுறையாக செயற்பட்டு வருகின்றதுடன், இலங்கை அரசாங்க நிறுவகங்களானவை இலங்கை எல்லைக்குள் மற்றும் வெளியில் ஆட்கடத்தல் குற்றத்தை கையாளும் வகையில் தகவல், புலனாய்வு, மற்றும் சிறந்த செயன்முறைகளையும் பகிர்ந்துகொள்கின்றன.
இந்த இ-பயிற்சி கற்கை மேடையில், கடத்தலில் இருந்து ஆட்கடத்தல் எவ்வாறு மாறுபடுகின்றது என்பது உட்பட ஆட்கடத்தல் குற்றம் பற்றிய அடிப்படை விளக்கத்தை உத்தியோகத்தர்களுக்கு வழங்கும் முகமாக மொத்தமாக ஏழு மொடியூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மொடியூல்கள் சம்பந்தப்பட்ட சட்ட வேலைச்சட்டகம், சம்பந்தப்பட்ட சர்வதேச செயன்முறைகள் மற்றும் உடன்படிக்கைகள், பாதிப்புக்கு உட்படும் சாத்தியமுள்ளவர்களை பயனுறுதியான முறையில் இனங்காணல் மற்றும் நேர்காணல், உதவி மற்றும் பாதுகாப்பிற்காக பரிந்துரைத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பான மீள்வருகையை உறுதிசெய்தல் மற்றும் இவ்விடயத்தில் கொன்சியுலர் மற்றும் தூதரக பணியாட்களின் வகிபாகம் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விளக்கம் ஆகியவற்றையும் வழங்குகின்றன.
இங்கு உரையாற்றிய அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் பிறைஸ் ஹட்சின் அவர்கள் ஆட்கடத்தல் முறியடிப்பு தொடர்பில் இலங்கையின் ஒத்துழைப்பை பாராட்டியதுடன் ஆட்கடத்தலுக்கு எதிரான பாலி செயன்முறையின் உறுப்பு நாடென்ற வகையில் இலங்கையின் சீரான முனைப்பான வகிபாகத்தையும் சுட்டிக்காட்டினார். ஆட்களை கடத்துதல், ஆட்கடத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகடந்த குற்றம் ஆகியன கொள்கை பற்றிய கலந்துரையாடல், தகவல் பரிமாற்றம் மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான பிராந்திய தளத்தை ஆசிய - பசுபிக் நாடுகளுக்கு வழங்குகின்றது. நீதி அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படை ஆகியன உட்பட பல்வேறு அரசாங்க நிறுவகங்களில் ஆட்கடத்தல் மற்றும் ஆட்களை கடத்துதல் பற்றிய பிரச்சினைகளை கையாளுதல் பற்றிய திறன்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கயின் முக்கிய இரதரப்பு பங்காளியாக அவுஸ்திரேலியா செயற்படுகின்றது.
இந்த பாடநெறியின் உள்ளடக்கமானது ஆட்கடத்தல் முறியடிப்பு பற்றிய பயிற்சிக் கையேட்டின் அடிப்படையில் அமைந்துள்ளதுடன், குடியேற்றங்களுக்கான சர்வதேச அமைப்பு பற்றிய இலங்கையின் 'ஒரு பொதுவான தகவல் பிரச்சாரத்தின் ஊடாக ஆட்கடத்தல் முறியடிப்பு' கருத்திட்டத்தின் பாகமொன்றாக அமைந்துள்ளது என்று குடியேற்றங்களுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை பிரதானி கிசுப்பே குறோசிட்டி குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தின் இலத்திரனியல் பயிற்சி பிரிவு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பயிற்சி பிரிவு என்பதால், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தின் இலத்திரனியல் பயிற்சி பிரிவினாது அதன் இணைய கற்கை பிரிவில் இந்த பாடநெறியை நடாத்துவதில் பெருமிதம் அடைகின்றது என்று பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தின் இலத்திரனியல் பயிற்சி பிரிவின் பணிப்பாளர் நாயகமான தூதுவர் பமேலா டீன் தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது ஆட்கடத்தல் பிரச்சினைக்கு பரிகாரம் காணும் வகையில் காத்திரமான வகிபாகமொன்றை சமீபகாலங்களில் வகித்துள்ளதுடன் இலங்கையானது சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆட்கடத்தல் அறிக்கை - 2018 இல் இரண்டாம் ஸ்தானத்தை தொடர்ச்சியாக இரண்டாம் முறையாகவும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.