'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது நடமாடும் கொன்சியூலர் சேவைகளை 2019 மே 10ஆந் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தியது.
2019 மே 11ஆந் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் அம்பாறையிலுள்ள உஹன மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அம்பாறை மாவட்டத்தில் நிறுவப்பட்ட நிகழ்ச்சிகளின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பிலும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பங்குபற்றியது.
நிகழ்ச்சிகளின் வெற்றிகரமான நிறைவுகளுக்காக ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட பங்களிப்புக்களை குறித்த முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான சந்திப்பின் அறிக்கை பிரதிபலித்தது.
அம்பாறை மாவட்டத்தில் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட பகுதியாக விளங்கும் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் வாழும் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நடமாடும் சேவைகளின் வாயிலாக, ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துதல், கைவிடப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து வரல், வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்களின் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல் தொடர்பான தகவல்கள், புலம்பெயர்ந்த இலங்கையர்களின் சம்பள நிலுவைகள், நட்டஈடுகள், சட்ட மற்றும் காப்புறுதி நிலுவைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் வெளிநாடுகளில் மரணமடைந்த பிரஜைகளின் சடலங்களை நாட்டிற்கு எடுத்து வருவதற்கான நடைமுறைகள் போன்ற பல சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருந்தது.
'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் அமைச்சு பங்குபற்றியிருந்ததுடன், இந்த இரண்டு மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலகங்களில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளையும் நடாத்தியிருந்தது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
14 மே 2019