![01](http://www.mfa.gov.lk/wp-content/uploads/2019/11/01-1.jpg)
பொதுநலவாய செயலாளர் நாயகம் ஓய்வுபெற்ற கௌரவ. பட்ரிசியா ஸ்கொட்லேன்ட் அவர்கள், இலங்கையர்களுக்கு மாத்திரமன்றி உலகிற்கும் நன்மை பயக்கும், உலர் வலயக் காடுகளை விட 2 - 4 மடங்கு அதிகமான வகையில் கார்பன் பிரித்தெடுப்பை அதிகரிக்கும் தனது சதுப்புநிலங்களை மேம்படுத்துவதற்கு இலங்கை ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் முகமாக, கொக்கலவில் உள்ள வாத்துவவில் அமைந்துள்ள சதுப்புநில மீள் நடுகைத் தளத்திற்கு குறுகிய விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டார்.
கடல் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான நியாயமான, சமமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்து, பொதுநலவாய நீல சாசனத்தின் கீழ் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீல சாசன செயற்குழுவிற்கு இலங்கை தலைமை தாங்குகின்றது. அந்த வகையில், சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் தரவுத்தளத்தை உருவாக்குதல், சதுப்புநில மறுசீரமைப்பு குறித்த தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் சமூக கூட்டாண்மை மற்றும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி, இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை முதலாவது சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீல சாசனக் கூட்டத்தை நடாத்தியது. இந்த செயற்குழு பொதுநலவாய நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், ஏனைய நாடுகள், தனியார் துறை மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரங்களில் ஆர்வம் காட்டும் அனைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் சமூகம் ஆகியவற்றையும் கருதுகின்றது.
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீல சாசனத்தின் முதலாவது கூட்டம், பொதுநலவாய நீல சாசன செயற்குழுவின் முன்னோடி மாதிரியாகக் கருதப்படும் கரீபியன், ஆபிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 09 உறுப்பு நாடுகளின் நிபுணர்களையும், அரச மற்றும் கல்வி வல்லுநர்களையும், சதுப்புநில மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள தனியார் துறைகளையும், இலங்கையிலுள்ள சமூக அடிப்படையிலான நிறுவனங்களையும் உள்ளடக்கி, சமுத்திரங்கள் மற்றும் காலநிலை மாற்றம், நிலையான மீன்வளர்ப்பு, பவளப்பாறைகளின் மறுசீரமைப்பு, சமுத்திரத்தை அவதானித்தல், பாதுகாக்கப்பட்ட கடல்வழிப் பகுதிகள், சமுத்திர அமிலமயமாக்கல், நீலப் பொருளாதாரம், சமுத்திரங்களிலான பிலாஸ்டிக் மாசு குறித்து தெரிவிக்கும் தூய்மையான சமுத்திரக் கூட்டணி போன்ற விடயங்கள் தொடர்பில் நடைபெற்றது.
2018 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, வனத் திணைக்களத்துடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் சுதீச என்ற சமூக அடிப்படையிலான நிறுவனத்தினால் பேணப்பட்டு வரும் தளமான சிலாபம் - பம்பல கடல் நீரேரியில் செரியோப்ஸ் டெகாண்ட்ரா என்ற இனத்தின் சதுப்பு நிலத் தாவரத்தை செயலாளர் நாயகம் நட்டு வைத்தார்.
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் உலகின் மிகவும் அச்சுறுத்தலான உலர் வலய சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக இருப்பதனால், கார்பனை மீள அமைப்பதற்கு அவசியமான சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, 2019 ஜூன் 05 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினத்தை நினைவுகூரும் வகையில், INSEE சிமென்ட், தென் மாகாணத்தின் காலியில் உள்ள அதன் சிமென்ட் ஆலைகளுக்கு சமீபத்தில் அமைந்துள்ள கொக்கல கடல் நீரேரியில் சதுப்புநில வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காக உறுதிபூண்டது. கொக்கல கடல் நீரேரியில் உள்ள 22 சதுப்புநில இனங்களில், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட உண்மையான 10 சதுப்புநில தாவர இனங்கள் உள்ளன. உலகின் சதுப்புநில இனங்களில் 1/3 பங்கு இலங்கையில் உள்ளது.
கள விஜயமானது, சதுப்புநில மரக்கன்று நாற்றங்கால் மற்றும் உள்ளூர் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் தகவல் மையம் ஆகியவற்றுக்கான விஜயங்களையும், 'ரைசோபோரா முக்ரோனாட்டா (மஹா கடோல்)' இன சதுப்புநில மரக்கன்றுகளை நடுவதனையும் உள்ளடக்கியிருந்தது.
இந்த விஜயம், இலங்கை தனது நிலத்தில் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக அமைந்துள்ளது; 2018 ஏப்ரல் மாதத்தில் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் கூட்டத்தில், தேசியக் கொள்கையொன்றை அபிவிருத்தி செய்தல், வழிகாட்டுதல்கள் மற்றும் பதினான்காயிரம் (14,000) ஹெக்டெயார் நிலத்தை சதுப்புநில மறுவாழ்வு / மறுசீரமைப்புக்காக பிரகடனப்படுத்துதல் மற்றும் சதுப்புநிலங்களுக்கான நிபுணர் குழு மற்றும் பணிக்குழுவொன்றை அமைத்தல் ஆகியன உள்ளடங்கலாக, சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீல சாசனத்தை வெற்றி கொள்வதாக இலங்கை உறுதியளித்தது.
இதன்போது, பொதுநலவாய செயலாளர் நாயகம், தனது ஊழியர்களின் தலைவர், சிரேஷ்ட தகவல் தொடர்பு அதிகாரி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் INSEE சிமென்ட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் நன்மதிப்பு முகாமையாளர் ஆகியோருடன் இணைந்திருந்தார்.
![02](http://www.mfa.gov.lk/wp-content/uploads/2019/11/02-1.jpg)
![03](http://www.mfa.gov.lk/wp-content/uploads/2019/11/03-1.jpg)
![10](http://www.mfa.gov.lk/wp-content/uploads/2019/11/10.jpg)
![11](http://www.mfa.gov.lk/wp-content/uploads/2019/11/11.jpg)