பொதுநலவாய நீல சாசன வெபினார்: சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமையின் வளங்களைத் திறத்தல்

பொதுநலவாய நீல சாசன வெபினார்: சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமையின் வளங்களைத் திறத்தல்

சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமை மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீல சாசன செயற்குழுவின் முன்னணி நாடாக, சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக, 'பொதுநலவாய நீல சாசன வெபினார்: சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமையின் வளங்களைத் திறத்தல்' என்ற நிகழ்வை பொதுநலவாய செயலகத்துடன் இணைந்து சமீபத்தில் இலங்கை ஏற்பாடு செய்திருந்தது.

சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமையின் முக்கியத்துவத்தை 'ஒரு தனித்துவமான, சிறப்பான மற்றும் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் முறைமை' என்ற வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதனையும், அவற்றின் நிலையான முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகளுக்கான தீர்வுகளை ஊக்குவிப்பதனையும் இலக்காகக் கொண்ட சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சர்வதேச தினமானது, யுனெஸ்கோவின் பொது மாநாட்டால் 2015ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆந் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

கடந்த 50 ஆண்டுகளில் 30 முதல் 50% சதுப்பு நிலங்கள் இழக்கப்பட்டுள்ளன. புதிய, குறைந்த விலையிலான தொழில்நுட்பங்களிலிருந்து பயனடைவதற்காகவும், அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் புதுமையான நிதியுதவி ஆகியவற்றின் மூலம் உள்ளூர் சமூகங்களின் விரிதிறன்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும், சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கான புதிய அணுகுமுறைகள் உருவாகி வருகின்றன.

சதுப்பு நிலங்களை சிறப்பாக நிர்வகிக்கத் தேவையான தகவல்களை சேகரிப்பதற்காகவும், பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுநலவாயம் முழுவதிலுமுள்ள திட்டங்களிலிருந்து விடய ஆய்வுகள் மூலம் கற்றலை வெளிப்படுத்துவதற்காகவும், கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்குப் பின்னர் முன்னேறிச் செல்வதற்காக கிடைக்கக்கூடிய பல்வேறு தளங்களை முன்னிலைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் மற்றும் கொள்கை பற்றிய கண்ணோட்டத்தை வழங்குவதில் இந்த வெபினாரின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பொதுநலவாய நீல சாசத்தின் சமுத்திர ஆளுகை மற்றும் திட்ட முன்னணியின் ஆலோசகர் ஜெஃப் ஆர்டன் அவர்களால் பொதுநலவாய செயலகத்தில் நிர்வகிக்கப்பட்ட இந்த வெபினாரில், பொதுநலவாய நீல சாசனம், சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்த பொதுநலவாய நீல சாசன செயற்குழுவின் முன்னேற்றம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமைக்கான சர்வதேச தினத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தொடக்கக் கருத்துக்களை இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சகின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க வழங்கினார்.

இயற்கை மீளுருவாக்கம் செய்வதற்கு எதிரான மறுசீரமைப்பிற்கான தலையீடுகளிலிருந்து கற்றுக்கொண்ட விடயங்களை பகுப்பாய்வு செய்து, 'பொயிண்ட் லிசாஸில் சதுப்புநில முறைமையொன்றை மீட்டெடுத்தல்' குறித்த விடய ஆய்வை டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கடல்சார் விவகார நிறுவகத்தின் பதில் பணிப்பாளர் கலாநிதி ரஹன்னாஜுமான் முன்வைத்தார்.

சதுப்புநில சுற்றுச்சூழல் முறைமைகளின் சிதைவை அறிவியல் பூர்வமாகவும், சமூக உணர்வுகள் ரீதியிலும் அடையாளம் காணுதல் மற்றும் மறுசீரமைப்பில் இந்த இரண்டு செயன்முறைகளும் எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றன போன்றன கென்யாவின் கடல் மற்றும் மீன்வள ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி கலாநிதி. ஜூடித் ஒகெல்லோவின் விளக்கக்காட்சியின் போது வலியுறுத்தப்பட்டன.

இலங்கையில் உண்மையான சதுப்புநில உயிரினங்களின் பன்முகத்தன்மை, உயிரினங்களின் பாதிப்பு நிலை மற்றும் சான்றுகள் சார்ந்த நிர்வாகத்திற்கான தரவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில், 'எல்லா இடங்களிலும் சதுப்பு நிலங்கள்: இரண்டுமே ஒத்ததாக இல்லை' என்ற தலைப்பில் இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் உதவி கடல் சுற்றுச்சூழல் அலுவலர் திருமதி. அச்சினி பெர்னாண்டோ ஒரு விளக்கக்காட்சியை வழங்கினார்.

மடகாஸ்கர் மற்றும் இந்தோனேசியாவில் ஆரம்பிக்கப்பட்ட 'பசுமை வனாந்தர முன்முயற்சி' மூலமாக கடலோர சமூகங்களை மேம்படுத்தி, காலநிலை முறிவைத் தவிர்த்து, நீல கார்பன் மற்றும் சதுப்புநில முகாமைத்துவம், மீன்வளம், மாற்று வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக ஆரோக்கியத்தை ஒருங்கிணைத்தல் போன்றன லியா கிளாஸ், குளோபல் ஸ்ட்ரேடஜிக் லீட், ஐக்கிய இராச்சியத்தின் ப்ளூ வென்ச்சரின் சதுப்புநில பாதுகாப்பு ஆகியவற்றினால் வழங்கப்பட்டது.

வெபினாரில் 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதுடன், 20 நிமிட கேள்வி பதில் அமர்வும் நடைபெற்றது.

சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நியாயமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான அணுகுமுறையில் பொதுநலவாய நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நீல சாசனம் உதவுகின்றது. சமுத்திரம் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காகவென அர்ப்பணிக்கப்பட்ட செயற்குழுக்களின் தொகுப்பின் மூலம் இந்த சாசனம் செயற்படுத்தப்படுவதுடன், அவை 'சம்பியன்' நாடுகளின் தலைமையிலான உறுப்பு நாடுகளால் இயக்கப்படுகின்றன. இதுவரை, 10 கருப்பொருள்களில் 13 நாடுகள் சம்பியன்களாக முன்னேறியுள்ளன. இதுபோன்றதொரு செயற்குழுவாக சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைக் குழு (MELAG) காணப்படுவதுடன், அது இலங்கையினால் தலைமை தாங்கப்படுகின்றது. அவுஸ்திரேலியா, பங்களாதேசம், பஹாமாஸ், ஜமைக்கா, கென்யா, நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய இராச்சியம் மற்றும் வனடு ஆகியன இந்த செயற்குழுவின் தற்போதைய உறுப்பினர்களாகும்.

சதுப்புநிலங்களுக்கான சம்பியன் நாடென்ற வகை, சதுப்புநிலக் கொள்கை, வழிகாட்டுதல்கள், பல்தரப்பு பங்குதாரர் செயலணி மற்றும் சதுப்பு நிலங்கள் குறித்த நிபுணர் குழு ஆகியவற்றை உருவாக்கி, உலகின் முதலாவது சதுப்புநில அருங்காட்சியகத்தை நிறுவி, ஏனைய பயன்பாடுகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுப்பதற்கான சட்டங்களை இலங்கை ஏற்கனவே இயற்றியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

 

30 ஜூலை 2020

Please follow and like us:

Close