பல உள்நாட்டு செயற்பாட்டு முன்னுரிமைகள் இருந்தபோதிலும், இலங்கை தனது மதிப்பீடுகளை இன்றுவரை செலுத்துவதில் தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்ததுடன், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்ற மோசமான நிதி நெருக்கடியை எதிர்த்து அமைப்பு போராடும் நேரத்தில், உறுப்பு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட வளங்களை மிகவும் பயனுள்ள, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான முறையில் பயன்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் செயலகத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கான இலங்கைத் தூதுக்குழு இந்த வாரம் அழைப்பு விடுத்தது.
2019 அக்டோபர் 18 ஆந் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிதி நிலைமையை மேம்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஐந்தாவது குழுவில், பொதுச் சபையின் தலைவர் டிஜ்ஜனி முஹம்மத் - பண்டே அவர்களின் முன்னிலையில், இலங்கையின் பிரதிநிதியான கனடாவிற்கான பிரதி உயர் ஸ்தானிகர் திருமதி. சிதாரா கான் இந்த அவதானிப்பை மேற்கொண்டார்.
நிதி இருப்பின் அடிப்படையில் ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு சாத்தியமான வகையில் துருப்புக்களையும் உபகரணங்களையும் வழங்கும் உறுப்பு நாடுகளுக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கான பொதுச்செயலாளரின் உறுதிமொழியை பிரதிநிதி பாராட்டினார். திருப்பி அனுப்பப்படும் தருணத்தில், மாற்றப்படுவதற்கு அடையாளம் காணப்பட்ட அமைதி காக்கும் வீரர்கள் தொடர்பாக செயலகமானது தனது நிதிக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை வலியுறுத்தியதுடன், அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து நிலுவைத் தொகையையும் முன்கூட்டியே செலுத்தும் முறையை உறுதி செய்வது ஐ.நா. செயலகத்திற்கு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
ஐ.நா. அமைதிகாக்கும் செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டத்தில், 1960ஆம் ஆண்டு முதல் இலங்கை வழக்கமான பங்களிப்பாளராக இருந்து வருவதனை நினைவு கூர்ந்த திருமதி கான், ஒரு இறையாண்மை மிக்க அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் அதே வேளை, ஒரு அரச தலைவரின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் வகையிலான இலங்கை தொடர்பாக அமைதிச் செயற்பாடுகள் திணைக்களம் சமீபத்தில் பின்பற்றிய நடைமுறைகள் குறித்து கவலை தெரிவித்தார். ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அம்சங்களைப் பற்றி எழுதப்பட்ட தகவல்தொடர்புகளுக்கு முறையாக பதிலளிக்க செயலகம் தவறிவிட்டதை அவதானித்த பிரதிநிதி, வாய்மொழியாக வழங்கப்பட்ட தகவல்களில் குழப்பத்தையும் தவறான புரிதலையும் தவிர்ப்பதற்கு முறையான தகவல்தொடர்புகளை கொண்டிருப்பது முக்கியமானது என தெரிவித்தார். தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்ப்பதற்காகவும், அமைப்பின் தொழில்முறை நெறிமுறைகள் பாதுகாக்கப்படுவதற்காகவும், இதுபோன்றதொரு தவறான செயன்முறையை தொடர்ந்தும் அனுமதிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த ஐ.நா. செயலகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம்
நியூயோர்க்
18 அக்டோபர் 2019