ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் எழுதிய 'இலங்கை - ஓமான் உறவுகள் - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்' என்ற புத்தகம் ஓமான் சுல்தானேற்றுக்கான வெளியுறவு அமைச்சின் இராஜதந்திர நிறுவனத்தில், 2022 ஆகஸ்ட் 29ஆந் திகதி ஓமான் சுல்தானேற்றுக்கான வெளியுறவு அமைச்சின் இராஜதந்திர விவகாரங்களுக்கான துணைச் செயலர் ஷேக் கலீஃபா அல் ஹார்தியால் வெளியிடப்பட்டது. ஓமான் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், மஸ்கட்டில் உள்ள தூதுவர்கள், இராஜதந்திரிகள், ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், 2021 பெப்ரவரி 17ஆந் திகதி நினைவுகூரப்பட்டது.
இந்நூல் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்புகளை விவரிபடபதுடன், இரு நாடுகளுக்கிடையில் ஆழமான பொருளாதார ஈடுபாட்டை வளர்க்கும் நோக்கில் இரு நாடுகளினதும் உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து முக்கிய தகவல்களை வழங்கும் அதே வேளையில் அதன் எதிர்காலக் கண்ணோட்டத்தை முன்னறிவிக்கின்றது.
ஓமான் சுல்தானேற்றுக்கான வெளியுறவு அமைச்சர் சயீத் பத்ர் அல்புசைதி இந்தப் புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில், 'இலங்கை மற்றும் ஓமானின் இராஜதந்திரப் பயணம் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கின்றது. எவ்வாறாயினும், இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளின் அடிப்படையில், எமது பிணைப்புக்கள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லாவிட்டாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, காலத்தின் பழைமைக்குள் செல்கின்றன. தூதுவர் அமீர் அஜ்வாத், ஹொக்கி முதல் பழங்கள் வரை, சர்வதேச தேயிலை தினம் முதல் கிரிக்கெட் போட்டிகள் வரை மற்றும் மீன்வளம் முதல் தொழில்நுட்பம் வரை எமது நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு பற்றிய விரிவான மீளாய்வை முன்வைத்துள்ளார். எமது நாடுகளின் பயணத்தின் ஒவ்வொரு அடியும் எமது மக்களிடையேயான ஆழமான வேரூன்றிய தொடர்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை அவரது புத்தகம் நிரூபிக்கின்றது. இது இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான உறவுகளின் அடிக்கல்லாக எப்போதும் இருந்து வருகின்றது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓமானில் உள்ள இலங்கை சமூகத்திற்கு புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விழா 2022 ஆகஸ்ட் 30ஆந் திகதி மஸ்கட்டில் உள்ள இலங்கைப் பாடசாலையில் நடைபெற்றது. ஓமான் வர்த்தக மற்றும் தொழில்துறையின் தலைவர் ராதா ஜுமா அல் சலேஹ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் போது இலங்கை சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வாத் நூல் பற்றிய சுருக்கமான முன்னுரையை வழங்கினார். எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் ஆழமான பொருளாதார ஈடுபாட்டை வளர்ப்பதற்கான 'வரைபடத்தை' உருவாக்குவதே இந்தப் புத்தகத்தின் முதன்மையான நோக்கமாகும் என சுட்டிக்காட்டிய அவர், ஓமானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அந்த திசையில் தீவிரமாகப் பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
புதிய புத்தகத்தை மீளாய்வு செய்த சிரேஷ்ட நிருபரும், ஓமான் ஒப்சர்வரின் இணையவழி ஆசிரியருமான லக்ஷ்மி கொதனேத், பல்வேறு துறைசார் ஒத்துழைப்பின் கீழ் புத்தகத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நிபுணர் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் புத்தகத்திற்கு மதிப்பு சேர்த்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
மஸ்கட் இலங்கை பாடசாலையின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பாடசாலையின் பதில் அதிபர், சமூக அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்தப் புத்தகத்தை ஓமானில் உள்ள பிளக் அன்ட் வைட் மீடியா அன்ட் சேர்விசஸ் எல்.எல்.சி. நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தூதரகம்,
மஸ்கட்
2022 செப்டம்பர் 02