இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசியா, பசுபிக் மற்றும் பரவல் அல்லாதவை தொடர்பான வெளிநாட்டு உறவுகள் உபகுழு அவையின் எம்.டி, தலைவர் திரு. அமி பெரா மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகள் குழுவிற்கான அவை, பாதீட்டுக் குழு மற்றும் நெறிமுறைகள் குழுவின் உறுப்பினர் திரு. ஜோர்ஜ் ஈ.பி. ஹோல்டிங் மற்றும் காங்கிரஸ் குழு ஊழியர்களின் இரண்டு உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் தூதுக்குழுவினரை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (2020 பெப்ரவரி 17) சந்தித்தார்.
அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தும் புதிய ஒத்துழைப்புத் துறைகளில் முன்னேற்றமடைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்த விஜயமானது ஒரு குறிப்பிடத்தக்க நேரத்தில் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், விஞ்ஞானம், புத்தாக்கம் மற்றும் விவசாயத் துறைகளில் அமெரிக்காவுடனான இலங்கையின் உறவை, இரு தரப்பிலிருந்துமான குறிப்பிட்ட துறைகள் சார்ந்த பிரதிநிதிகளுடன், துறை சார்ந்த உரையாடல்களை நடாத்துவதன் மூலம் பரந்த அளவில் முன்னெடுத்துச் செல்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து பிரதிநிதிகளுக்கு சுருக்கமாக விளக்கமளித்தார்.
அமெரிக்காவின் முக்கியமான மூலோபாய பங்காளர் என்ற வகையில் இலங்கையுடனான பன்முக உறவை முன்னேற்றுவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் வலுவான விருப்பத்தினை காங்கிரசின் இரு பிரதிநிதிகளும் வெளிப்படுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, இரு நாடுகளிலும் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பதற்கான அமெரிக்கத் தரப்பினரின் விருப்பத்தை பிரதிநிதிகளான பெரா மற்றும் ஹோல்டிங் ஆகிய இருவரும் வெளிப்படுத்தினர். உலக வரைபடத்தில் இலங்கையின் மூலோபாய புவியியல் அமைவிடத்தை அங்கீகரித்து, இலங்கையுடனான கடல் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
அண்மையில் இராணுவத் தளபதி மற்றும் பதில் பாதுகாப்புப் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடிக் குடும்பத்தாருக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்துவதற்காக, காங்கிரஸ் தூதுக்குழுவினரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை அமைச்சர் பயன்படுத்திக் கொண்டதுடன், தனது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டார். பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இரு தரப்பினருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தாமல் இத்தகைய தடைகளை கடக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார்.
இந்தக் கவலைகளில் தூதுக்குழுவினர் கவனம் செலுத்தியதுடன், இந்த உணர்வுகளை ஐக்கிய அமெரிக்க காங்கிரசுக்கு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலின் போது, காங்கிரஸ் தூதுக்குழுவினருடன் ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் தூதரகத்தின் அதிகாரிகள் இணைந்திருந்தனர். வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம். பெரேரா மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலின் போது அமைச்சருடன் இணைந்திருந்தனர்.
இலங்கையில் தங்கியிருந்தபோது, இந்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதம மந்திரியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரை சந்தித்திருந்தனர்.
இந்த தூதுக்குழுவினர் இன்று புறப்படுவதற்கு முன்னர், அவர்களுக்கு வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க மதிய போசன விருந்தளித்ததுடன், இலங்கையின் முன்னணி வர்த்தகப் பிரமுகர்களும், பொருளாதாரம் தொடர்பான அரச நிறுவனங்களின் தலைவர்களும் அதில் கலந்து கொண்டனர்.