கொரியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவர் சாவித்ரி பானபொக்கே ஐ.நா. வின் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகமும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பான் கீ மூனை 2023 பெப்ரவரி 01ஆந் திகதி சியோலில் உள்ள பான் கீ மூன் அறக்கட்டளையில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர், ஒரு இராஜதந்திரியாகவும், ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த காலத்திலும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தில் அவரது தற்போதைய தகுதியிலும் இலங்கையுடனான தனது நீண்டகால நட்பு மற்றும் ஈடுபாட்டை நினைவு கூர்ந்தார். இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயம் குறித்தும் அவர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கையில் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் முயற்சிகளுக்கு தூதுவர் பானபொக்கே பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், காலநிலை மாற்றம் மற்றும் பசுமை வளர்ச்சி தொடர்பான ஒத்துழைப்பின் எதிர்கால பகுதிகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இலங்கை தற்போது உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவன பேரவையின் துணைத் தலைவராகவும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவன சபையின் துணைத் தலைவராகவும் உள்ளது.
பான் கி-மூன் அறக்கட்டளையின் சர்வதேச ஒத்துழைப்புப் பிரிவின் தலைவர் சோய் சுங்-ஜூ, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் ஆளுகைப் பிரிவின் தலைவர் திரு. டேவ் கிம் மற்றும் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் திருமதி சச்சினி டயஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
சியோல்
2023 பிப்ரவரி 03