ஐக்கிய இராச்சியத்தில் எல்.ரீ.ரீ.ஈ. இன் தடை மீதான மேன்முறையீடு

ஐக்கிய இராச்சியத்தில் எல்.ரீ.ரீ.ஈ. இன் தடை மீதான மேன்முறையீடு

ஊடக அறிக்கை

 ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் 2020 அக்டோபர் 21 ஆந் திகதிய திறந்த தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 மார்ச் 08 ஆந் திகதியிட்ட ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க செயலாளரின் தீர்மானத்தை எதிர்த்து எல்.ரீ.ரீ.ஈ. முற்போக்கு அமைப்பால் 2019 மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பிரதிபலிப்பாக அமையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் இந்த தீர்மானமானது, 2000 ஆம் ஆண்டின் ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ.) மீதான தடையை நீக்குவதற்காக குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இந்த நடவடிக்கைகளுக்கான ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இல்லாத காரணத்தினால், நேரடியான பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ள முடியவில்லையாயினும், தொடர்ச்சியாக இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பானது மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் அதே வேளையில், மேலதிக விசாரணைகளுக்கும் சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், இங்கிலாந்தில் இடம்பெறும் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கமான அவதானங்களை செலுத்தும்.

வன்முறையைத் தூண்டி, நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படும் எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தங்களுடன் இணைந்த குழுக்களின் எச்சங்கள் வெளிநாடுகளில் செயலில் உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான போதுமான சான்றுகள் இலங்கை அரசாங்கத்திடம் காணப்படுகின்றன. இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அவதானமாக இருப்பதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எப்பொழுதும் தனது ஆதரவுகளை வழங்கும்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

22 அக்டோபர் 2020

Please follow and like us:

Close