துர்க்மெனிஸ்தானின் மஜ்லிஸ் தலைவருக்கு தூதுவர் விஸ்வநாத் அபோன்சு  நற்சான்றிதழை கையளிப்பு

துர்க்மெனிஸ்தானின் மஜ்லிஸ் தலைவருக்கு தூதுவர் விஸ்வநாத் அபோன்சு  நற்சான்றிதழை கையளிப்பு

துர்க்மெனிஸ்தானின் மஜ்லிஸ் (நாடாளுமன்றத்தின்) தலைவரிடம் (சபாநாயகர்) 2022  டிசம்பர் 08ஆந் திகதி அஷ்கபாத்தில் உள்ள மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சு தனது நற்சான்றிதழை கையளித்தார்.

துர்க்மெனிஸ்தான் குடியரசிற்கான இலங்கைத் தூதுவரை வரவேற்ற மஜ்லிஸ் தலைவர் குல்சாத்  மம்மெடோவா, தூதுவர் விஸ்வநாத் அபோன்சுவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அவர் தொடர்ந்தும் வலுப்படுத்துவார் என நம்பிக்கை தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை மக்களின் வாழ்த்துக்களை ஜனாதிபதி செர்தார் பெர்டிமுஹமடோவ் மற்றும் துர்க்மெனிஸ்தான் மக்களுக்குத் தெரிவித்த தூதுவர், குறிப்பாக வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, சுற்றுலா மற்றும் சட்டமன்றத் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

துர்க்மெனிஸ்தானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வேபா ஹாஜியேவ் உடனான  சந்திப்பின் போது, தூதுவர் அபோன்சு, இருதரப்பு அரசியல் ஆலோசனைகளைக் கூட்டுதல், உயர்மட்டப் பயணங்களைப் பரிமாறிக்கொள்ளுதல், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான தொடர்புகளை ஏற்படுத்துதல், விவசாயம், ஆடைத் தொழில்கள், கல்வி, கலாச்சாரம் மற்றும் கலைகள், சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகிய துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக துர்க்மெனிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவை தூதுவர் அபோன்சுவிடம் பிரதி வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார். 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் துர்க்மெனிஸ்தானில் இருந்து இலங்கைக்கு உயர்மட்ட விஜயத்தை மேற்கொள்ளவும் முன்மொழியப்பட்டது.

எரிசக்தி அமைச்சர், வர்த்தக மற்றும் வெளிநாட்டு பொருளாதார உறவுகள் பிரதி அமைச்சர்  ஆகியோரையும் சந்தித்த தூதுவர், இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கு இடையில் இருவழி வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல் மற்றும் மின்சாரம், எரிசக்தி மற்றும் இரசாயனத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். எதிர்கால உயர்மட்ட விஜயத்தின் போது விடயங்களை பரிசீலிக்க துர்க்மெனிஸ்தான் தரப்பு ஒப்புக்கொண்டதுடன், இரு வணிக மன்றங்களுக்கும் இடையே ஒரு மெய்நிகர் சந்திப்பை முன்கூட்டியே நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தொழில்துறை, வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான துறைகளில் தற்போதுள்ள உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில், துர்க்மெனிஸ்தானின் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஒன்றியத்தின் தலைவருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

தூதுவர் அபோன்சு இலங்கை வெளிநாட்டு சேவையின் தரம் I அதிகாரி என்பதுடன்,  சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலும், சவுதி அரேபியா, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்களிலும் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் நிதித்துறையில் பட்டதாரியான இவர், முறையே களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் மொரட்டுவையில் உள்ள பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

 

2022 டிசம்பர் 15

 

Please follow and like us:

Close