தூதர் விஸ்வநாத் அபோன்சு தெஹ்ரானில் நடைபெற்ற IRANPHARMA EXPO 2023 இல் பங்கேற்பு

 தூதர் விஸ்வநாத் அபோன்சு தெஹ்ரானில் நடைபெற்ற IRANPHARMA EXPO 2023 இல் பங்கேற்பு

 ஈரான் இஸ்லாமிய குடியரசின் அழைப்பின் பேரில், ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சு, 2023 செப்டம்பர் 27 முதல் 29 வரை தெஹ்ரானிலுள்ள, இமாம் கொமேனி கிராண்ட் கேம்பஸில் (மொசாலா) நடைபெற்ற "IRANPHARMA EXPO 2023" என்ற மருந்து மற்றும் அதனுடன் தொடர்புடைய, உற்பத்தித்துறைகளுக்கான, 08 ஆவது சர்வதேச கண்காட்சியில்  பங்கேற்றார். 427 இற்கும் மேற்பட்ட ஈரானிய நிறுவங்கள் மற்றும், 33 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய 282 வெளிநாட்டு கண்காட்சியாளர்கள், இச்சர்வதேசக்கண்காட்சியில், தனது உற்பத்திகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

IRANPHARMA EXPO என்பது, மருந்து கைத்தொழிற்துறைக்குரிய, மருந்து உற்பத்தியாளர்கள், மருந்துற்பத்திக்கான கருவிகள் மற்றும் இயந்திரங்கள், மீளிணைப்பு மருந்துகள், மூலிகை மருந்துகள், உணவு மற்றும் உணவு பதிலி நிரப்பிகளாக உட்கொள்ளும் மருந்துகள், மருந்து தொடர்பிலான அறிவு-சார் நிறுவனங்கள், மருந்து விநியோகஸ்தர்கள், விஞ்ஞான மற்றும் மருந்தாய்வு வசதிகள், சுகாதாரம்-சார்ந்த வெளியீடுகள் மற்றும் அமைப்புக்கள் ஆகியோரை முன்னிலைப்படுத்தி, நடைபெறும் வருடாந்த நிகழ்வாகும். இக்கண்காட்சியானது, ஈரான் மற்றும் மேற்காசியாவில் உள்ள முக்கிய மருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வசதிகளுக்கான சாத்தியப்பாடுடைய வியாபார பங்குடைமைளுக்கு புதியதொரு தளத்தை உருவாக்கிக்கொடுக்கும் ஒரு முன்னோடி வியாபாரக் கூட்டுமுயற்சி ஆகும்.

மேற்படி கண்காட்சியின் தொடக்க விழாவின் போது, ​​தூதுவர் அபோன்சு ஈரானின் சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் கலாநிதி Bahram Einolahi ஐச் சந்தித்து, IRANPHARMA EXPO 2023 ஐ வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமைக்காக  பாராட்டுகளைத் தெரிவித்தார். சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் மருந்துற்பத்தித் துறைகளில் ஈரானுடன் பயனுறுதிப்பாடுடைய, நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் இலங்கையின் ஆர்வத்தை அவர் தெரிவித்தார். தூதுவரின் பிரேரணையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இலங்கை மற்றும் ஈரானின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்ககிடையில் பிரேரணை தொடர்பிலான கலந்துரையாடல்களின் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஈரான் மருந்து ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் கலாநிதி சையத் அலி மபூதி தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியின் வர்த்தக கலந்துரையாடலில் இலங்கைத் தூதுவர் கலந்து கொண்டதுடன் மருத்துவக் கல்வித் துறை மற்றும் மருந்துத் துறையில் முதலீடுகள் உட்பட இலங்கை சந்தையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கினார். மருந்து நிறுவனங்களின் வணிகப் பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்தின் விவரங்கள் குறித்து கருத்து தெரிவித்ததுடன், இலங்கை சகாக்களுடன் ஆரம்பகட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கான தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகளை எடுத்துரைத்த தூதுவர், கூட்டுறவை ஆராய்வதற்கும் மருந்துத் துறையில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு தளத்தை உருவாக்குவதாக உறுதியளித்தார். ஈரானில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தற்போது உலகம் முழுவதும் 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இக்கண்காட்சியில், தூதுவரின் பங்கேற்புக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த Dr. Sayed Ali Maboudi இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில், குறிப்பாக இரு நாடுகளின் நலனுக்காக மருந்துத் துறையில் புதிய கூட்டாண்மைகளை நிறுவுவதற்கான தனது ஆதரவை உறுதியளித்தார். இந்தியா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா, பொலிவியா மற்றும் ஜிம்பாப்வே உட்பட தெஹ்ரானை அடிப்படையாகக் கொண்ட பல தூதர்கள் மற்றும் பிரதிநிதிகள் IRANPHARMA EXPO 2023 இல் கலந்து கொண்டனர்.

இலங்கை தூதரகம்

தெஹ்ரான்

 

 02 அக்டோபர் 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close