துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திசாநாயக்க அங்காராவில் நற்சான்றிதழ்களை கையளிப்பு

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திசாநாயக்க அங்காராவில் நற்சான்றிதழ்களை கையளிப்பு

துருக்கி குடியரசிற்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முழுமையான மற்றும் அதிகாரமுடைய தூதுவராக தன் னை நியமிக்கும் நற்சான்றிதழ் கடிதங்களை, துருக்கிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் சரண்யா ஹசந்தி உருகோடவத்த திசாநாயக்க, 2022 டிசம்பர் 27ஆந் திகதி அங்காராவிலுள்ள ஜனாதிபதி வளாகத்தில் வைத்து துருக்கி குடியரசின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனிடம் கையளித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி எர்டோகன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். துருக்கியுடனான இலங்கையின் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் நினைவு கூர்ந்த அவர், ஒட்டோமான் பேரரசின் போது 09ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தொடர்புகளுடன் அது காணப்பட்டதாகக் குறிப்பிட்டார். 1864ஆம் ஆண்டு இலங்கைக்கான கௌரவத் தூதுவரை உஸ்மானியப் பேரரசு காலியில் வதிவிடமாக நியமித்தது முதல் முறையான உறவுகள் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

2005 ஆம் ஆண்டு துருக்கியின் பிரதமராக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி எர்டோகன், துருக்கிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் ஆகஸ்ட் 2022 இல் இலங்கைக்கு மருத்துவ விநியோகத்தை நன்கொடையாக வழங்கியதையும் குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில், இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் தனது சேவைகளைத் தொடர்ந்த சில விமான நிறுவனங்களில் துருக்கிய எயார்லைன்ஸும் ஒன்று எனத் தெரிவித்த ஜனாதிபதி எர்டோகன், இலங்கையில் துருக்கிய எயார்லைன்ஸின் செயற்பாட்டிற்கான தொடர்ச்சியான ஆதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி எர்டோகனின் கருத்துக்களுக்கு நன்றி தெரிவித்த தூதுவர் திஸாநாயக்க, சிரேஷ்ட தொழில் இராஜதந்திரி என்ற வகையில், இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரையால், இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால மற்றும் சுமுகமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளித்த ஜனாதிபதி மற்றும் துருக்கி அரசாங்கத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதி எர்டோகனுக்கு விளக்கமளித்த தூதுவர் திஸாநாயக்க, இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக வரலாற்று உறவுகளை மேம்படுத்துவதற்கு தனது அதிகபட்ச திறமைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் உறுதியளித்தார்.

அபிவிருத்திக்கான முன்நிபந்தனையாக பெண்களுக்கு அதிகாரமளிக்க வழிவகுத்த 'கெமாலிஸ்ட்' சித்தாந்தத்தின் ஒரு பகுதியான மதச்சார்பற்ற, பன்மைத்துவ ஜனநாயக அம்சங்களுடன் தேசத்தை நவீனமயமாக்கிய துருக்கியக் குடியரசின் தொலைநோக்கு ஸ்தாபகத் தந்தை முஸ்தபா கெமால் அட்டதுர்க்கிடமிருந்து தான் பெற்ற உத்வேகத்தை தூதுவர் திஸாநாயக்க வெளிப்படுத்தினார்.

முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையானது, உண்மையில் ஒரு உலகளாவிய உத்வேகமான பெண்கள் உட்பட அனைத்து குடிமக்களின் விடுதலையுடன் நாட்டை நவீன நாடாக மாற்றியுள்ளதாகவும், நீதி மற்றும் சட்ட அமைப்பை மறுசீரமைத்து அனைவருக்கும் நீதி வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தூதுவர் திஸாநாயக்க மேலும் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் போது பகிரப்பட்ட பார்வையின் பொதுவான அம்சமும் இதுவாகும்.

தூதுவர் திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், துருக்கி தனது 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதுடன், இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற 2023 இரு நாடுகளுக்கும் தனித்தனியாகவும் இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். இலங்கையும் துருக்கியும் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளன.

2023 ஆம் ஆண்டில் ஐ.நா. வின் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் கட்சிகளின் 16வது மாநாட்டை நடத்துவதற்கான அர்ப்பணிப்பு, உலகளாவிய பூஜ்ஜிய கழிவு முயற்சி மற்றும் உலகின் மிகப்பெரிய அலை ஆற்றல் திட்டம் பற்றிய அறிவிப்பு உள்ளிட்ட காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஜனாதிபதி எர்டோகனின் முன்முயற்சிகளுக்கு தூதுவர் திஸாநாயக்க வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை எளிதாக்குவதில் துருக்கியின் மென்மையான இராஜதந்திர திறன்கள் மற்றும் நாடு 3.6 மில்லியன் சிரிய அகதிகளுக்கும், 400,000 ஏனைய அகதிகளுக்கும் உணவளித்து வருகின்றமை மிகவும் பாராட்டப்பட்டது.

முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு, இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது மற்றும் சுங்க விடயங்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம், இருதரப்பு முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் சுற்றுலா துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கலாசார பரிமாற்றத் துறையில், துருக்கிய நாவலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், கல்விமான், நோபல் இலக்கியப் பரிசு பெற்ற ஒர்ஹான் பாமுக்கின் 02 நாவல்கள், தற்போது இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றும் சக இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரி நிலூக கதுருகமுவவினால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உள்ள துருக்கியத் தூதுவர் மற்றும் துருக்கிய எயார்லைன்ஸுடன் பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும், இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் 3வது அமர்வை அங்காராவில் நடத்த ஆவலுடன் இருப்பதாகவும் தூதுவர் திஸாநாயக்க தெரிவித்தார்.

சரண்யா ஹசந்தி உருகோடவத்த திசாநாயக்க 1996 இல் இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்து கொண்டதுடன், இதற்கு முன்னர் வியட்நாமில் இலங்கையின் தூதுவராகவும், ஷாங்காய் துணைத் தூதுவராகவும், ஜப்பான், சுவீடன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இராஜதந்திரப் பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.

துருக்கியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பிரிவிற்கான மேலதிக செயலாளராக பணியாற்றினார்.

இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 டிசம்பர் 29

Please follow and like us:

Close