குவைத்தில் உள்ள இலங்கைத் தூதுவர் யு.எல். மொஹமட் ஜௌஹர், குவைத் வெளிவிவகார அமைச்சர் ஷேக் சலேம் அப்துல்லா அல்-ஜாபர் அல்-சபாவை 2022 டிசம்பர் 29ஆந் திகதி குவைத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
அண்மையில் குவைத்தின் வெளிவிவகார அமைச்சின் பதவியை ஏற்றுக்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அல்-சபா, தூதுவரை வரவேற்றதுடன், குவைத்தில் தூதுவராக கடமையாற்றிய போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் செய்த சாதனைகளைப் பாராட்டினார்.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியின் வாழ்த்துக்களை தூதுவர் மொஹமட் ஜௌஹர் தெரிவித்ததுடன், குவைத்தின் வெளிவிவகார அமைச்சராக அவர் கடமைகளை பொறுப்பேற்றது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஷேக் சலேம் அப்துல்லா அல்-ஜாபர் அல்-சபாவிடம் தெரிவித்த வாழ்த்துச் செய்தியையும் கையளித்தார். வெளிவிவகார அமைச்சர் அல்-சபா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான தனது ஆர்வத்தையும் தெரிவித்தார்.
தனது கடமைப் பயணத்தின் போது குவைத் அரசாங்கமும் மக்களும் தனக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காக வெளிவிவகார அமைச்சர் அல்-சபா மற்றும் குவைத் வெளிவிவகார அமைச்சுக்கு தூதுவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இலங்கைத் தூதரகம்,
குவைத்
2023 ஜனவரி 05