கஸ்ர் அல் வத்தன் ஜனாதிபதி மாளிகையில் வைத்து தனது நற்சான்றிதழ்களை ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மத் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடம் தூதுவர் மல்ராஜ் டி சில்வா கையளித்தார்.
மேன்மை தங்கிய ஷேக் முகம்மத் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற நற்சான்றிதழ்களை கையளிக்கும் நிகழ்வில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகம்மத் பின் ரஷீத் அல் மக்தூம், ஏனைய அனைத்து ஆட்சியாளர்கள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களுக்கான இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைப் பிரதமர் மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை மக்களின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்தார்.
மரியாதை நிமித்தம் இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கை - ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றின் நட்புறவுகள் பரஸ்பரம் நன்மைகளைக் கொண்ட பல பகுதிகளை உள்ளடக்கி அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும், தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை சிறந்த நட்புறவு அந்தஸ்த்துக்கு மேலும் உயர்த்துவதற்கு இலங்கை நம்புவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
கூட்டாட்சி தேசிய சபையின் சபாநாயகர் சக்ர் கோபாஷ், பிரதிப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான மேன்மை தங்கிய லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான், பிரதிப் பிரதமரும் ஜனாதிபதி விவகாரங்களுக்கான அமைச்சருமான மேன்மை தங்கிய ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் வெளிநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் மேன்மை தங்கிய ஷேக் அப்துல்லாஹ் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் இந்த நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நற்சான்றிதழ்களைக் கயைளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, வணிகத் தலைவர்கள், வங்கியாளர்கள், தொழில்முனைவோர், இலங்கைச் சமூகத்தினர் மற்றும் தூதரக, துணைத் தூதரக ஊழியர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்று தூதுவரின் உத்தியோகபூர்வ வதிவிடமான 'இலங்கை இல்லத்தில்' இடம்பெற்றது.
தூதுவர் மல்ராஜ் டி சில்வா பல்வேறு திறன்களிலான ஒரு தொழில்த்துறை நிர்வாகியாவார். அவர் தனது முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நிறைவு செய்ததுடன், சிவில் பொறியியலாளர் பட்டத்தைப் பெற்று, கவுன்சில் ஒப் இன்ஜினியரிங் இன்ஸ்டிடியூஷன்ஸ் (இங்கிலாந்து) இலிருந்து மின்னியல் பொறியியல் கல்வியையும், கட்டிட அதிகாரிகளின் சர்வதேச மாநாட்டிலிருந்து (ஐக்கிய அமெரிக்கா) கட்டிட அலுவலர் தரத்தையும் பூர்த்தி செய்தார். தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஓமான் சுல்தானேட்டில் உள்ள வடக்கு அரண்மனையில் உள்ள அனைத்து நிர்மான நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான பகுதிக்கான அளவையாளராக இலங்கை இராணுவ பொறியியல் படையணியில் நேரடியாகப் பட்டியலிடப்பட்ட அவர், லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி அபிவிருத்தி அதிகாரசபையின் நிர்மான முகாமைத்துவப் பிரிவின் நிர்மான ஆய்வுத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமையாளரானார். அவர் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அமெரிக்காவின் எட்டு மேற்கு மாநிலங்களின் கொன்சுலர் நாயகமாக நியமிக்கப்பட்டார். ரஞ்சனி டி சில்வாவுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அவருக்கு மூன்று பிள்ளைகளும், நான்கு பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
இலங்கைத் தூதரகம்
அபுதாபி
2021 ஜனவரி 30