தூதுவர் ஆரியசிங்க வொஷிங்டன் டி.சி. யில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

தூதுவர் ஆரியசிங்க வொஷிங்டன் டி.சி. யில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

நியமனம் செய்யப்பட்ட அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத பி. ஆரியசிங்க அவர்களது தகைமைச்சான்றிதழ்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (2020 டிசம்பர் 4) ஏற்றுக்கொள்ளப்பட்டன. கோவிட் தொற்றுநோய் நெறிமுறைகளுக்கு அமைய முறையான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தகைமைச் சான்றிதழ்களை அமெரிக்க ஜனாதிபதிக்கு முறையாக வழங்கவேண்டியுள்ள நிலையில், தற்போது அவர் நியமனம் செய்யப்பட்ட தூதுவராகவும், தூதரகத் தலைவராகவும் செயற்படுவார்.

கடந்த டிசம்பர் 01ஆந் திகதி அமெரிக்காவை சென்றடைந்த தூதுவர் ஆரியசிங்க, தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனது இலங்கை வதிவிடத்திலிருந்து வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்களின் முன்னிலையில் வீடியோ இணைப்பின் மூலமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன், தொடர்ந்தும் கடமைகளில் பணியாற்றுவார்.

தற்போது இலங்கை வெளியுறவுச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியாகவுள்ள அவர், 3 அரசியல் நிர்வாகங்களின் கீழ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் அண்மித்த காலம் வரை இலங்கையின் வெளியுறவுச் செயலாளராகப் பணியாற்றினார். முன்னதாக, பெல்ஜியம், லக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராகவும் (2008-2012), ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஹொலி சீக்கான இலங்கையின் தூதுவராக அதிகாரமளிக்கப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் துணைத் தூதுவராகவும் (2012-2018) பணியாற்றினார். அவர் 2002-2006 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் பணியாற்றியதுடன், பிந்தைய காலத்தில் தூதுவர் தரவரிசையிலான தூதரகத்தின் பிரதித் தலைவராகவும், 1989-1991 வரை இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளராகவும் பணியாற்றினார்.

1982 ஆம் ஆண்டில் இலங்கைத் தொலைக்காட்சியான ரூபவாஹினியை அமைப்பதில் ஒரு முன்னோடியாக இருந்த அவர், 1988 இல் இலங்கை வெளியுறவுச் சேவையில் இணையும் வரை அரசியல் நிருபராக செயற்பட்டார். 1995-2000 மற்றும் 2007-2008 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அவர் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளராகவும், 2018 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வர்த்தகத்திற்கான மேலதிக செயலாளராகவும் பணியாற்றினார்.

தூதுவர் ஆரியசிங்க ஆனந்தா கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியைக் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளமாணிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 2001-2002ஆம் ஆண்டில் வொஷிங்டன் டி.சி. யின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சேவைகளுக்கான பீடத்தில் 'சர்வதேச உறவுகளின் சக மாணவர்' ஆவார்.

முன்னதாக, கல்லூரி மாணவராக இருந்தபோது, அவருக்கு 'அமெரிக்கன் ஃபீல்ட் சேர்வீஸ் புலமைப்பரிசில்' வழங்கப்பட்டதுடன், 1978-79 கல்வியாண்டை அமெரிக்காவில் கழித்தார். 1985ஆம் ஆண்டில், ஊடகத் துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக, ஜெய்சீஸ் ஜூனியர் செம்பர் இன்டர்நெஷனலின் 'இலங்கையின் சிறந்த பத்து இளைஞர்கள்' விருதைப் பெற்றுக் கொண்டார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2020 டிசம்பர் 06

 

Please follow and like us:

Close