ஆசிய கூட்டுறவு கலந்துரையாடலின் 16வது அமைச்சர்கள் மட்ட சந்திப்பு 2019 மே 01ஆந் திகதி டோஹாவில் நடைபெற்றது. அமைச்சர்கள் மட்ட சந்திப்பிற்கு முன்னராக சிரேஷ்ட உத்தியாகத்தர்களின் சந்திப்பும், அதற்கு பின்னராக ஏ.சி.டி. வர்த்தக மன்றமும் இடம்பெற்றன.
இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் பயங்கரவாதமானது சர்வதேச அச்சுறுத்தலாக அமைவதுடன், அனைத்து நாடுகளினதும் கருத்தொருமைப்பாட்டுடன் அது கையாளப்படுதல் வேண்டும் என தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் ஏனைய நாடுகடந்த குற்றங்களுக்கு எதிராக போராடுதல் மற்றும் வன்முறை ரீதியிலான தீவிரவாதத்தின் உதயத்தினை கையாளுதல் ஆகியன அரசாங்கங்களின் சர்வதேச கவனத்திற்குரியதொரு பிரச்சினையாக மாறியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். மனித உரிமைகள், தனிநபர்களின் உடல்சார் நேர்மை, அவர்களின் வாழ்வதற்கான உரிமை மற்றும் சுதந்திரத்தின் மீது நேரடியானதொரு தாக்கத்தினை பயங்கரவாதம் ஏற்படுத்துவதாக அமைச்சர் மாரப்பன தெரிவித்தார். மேலும், பயங்கரவாதமானது அரசாங்கங்ளை சீர்குலைப்பதும், சமாதானம் மற்றும் பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்குவதும், மனித உரிமைகளை அனுபவிப்பதினின்றும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதுமாகும்.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இலங்கையின் முப்படையினர் மற்றும் பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட அவசரகால முறைமையானது பயங்கரவாத சந்தேகநபர்களை அடையாளம் கண்டு, கைது செய்வதற்கு வெற்றிகரமாக அமைந்ததாக அமைச்சர் மாரப்பன வலியுறுத்தினார்.
அனைத்து ஏ.சி.டி. அமைச்சர்களும் தத்தமது அரசாங்கங்களின் இரங்கல்களை தெரிவித்துக் கொண்டதுடன், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் இலங்கையுடனான அவர்களது ஒற்றுமையை உறுதி பூண்டனர்.
பரஸ்பரம் நன்மை பயக்கவல்ல மற்றும் அனுகூலமான பங்காண்மையை வர்த்தக சமூகத்தினருக்கு இடையில் ஏற்படுத்துவதற்கு வழிகளை ஏற்படுத்தும் ஏ.சி.டி. வர்த்தக மன்றத்தை தாபிப்பதற்கான கட்டாரின் பூர்வாங்க முயற்சியை இலங்கை வரவேற்றது. 2019 மே 02ஆந் திகதி நடைபெற்ற ஏ.சி.டி. வர்த்தக மன்றத்திற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைமை தாங்கியது.
அமைச்சர் மாரப்பன அவர்கள் கட்டார், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுடனான இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டதுடன், பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
தேசிய ஏற்றுமதி மூலோபாயம் ஒன்றின் வாயிலாக இலங்கை எவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்கின்றது என்பது குறித்த சுருக்கமான விவரணை ஒன்றை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் ஜீவனி சிறிவர்த்தன வழங்கியதுடன், துருக்கி, கட்டார், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய ஏ.சி.டி. வர்த்தக மன்றத்தில் பங்குபற்றிய நாடுகளின் தனியார் துறை பிரிதிநிதிகளுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
அமைச்சர் மாரப்பன கட்டாரில் வதியும் 130,000 இலங்கையர்களை சந்தித்ததுடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை, கட்டாரிலுள்ள இலங்கை சமூகத்தினரால் முகங்கொடுக்கப்பட்டு வரும் பிரச்சினைகள் மற்றும் தகுதி வாய்ந்த மற்றும் தொழில்சார் ரீதியிலான பணியாளர்கள் கட்டாரில் உள்நுழைவதற்கான அளவீடுகள் ஆகியன குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரோஜா சிறிசேன, டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதி தூதுவர் ரத்னசிங்கம் கோகுலரங்கன் மற்றும் ஈ.டி.பி. மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
6 மே 2019