இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயம்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயம்

இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். 2024 டிசம்பரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இந்தியப் பயணம், 2025 ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம், 2025 அக்டோபரில் பிரதமரும், பேராசிரியருமான ஹரினி அமரசூரியவின் இந்தியப் பயணம், மற்றும் மிக சமீபத்தில், 2026 பெப்ரவரியில் புதுடில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் ஜனாதிபதி திசாநாயக்கவின் பங்கேற்பு உள்ளிட்ட, இரு நாடுகளுக்கும் இடையிலான தீவிரப்படுத்தப்பட்ட உயர்மட்ட ஈடுபாட்டின் பின்னணியில் இப்பயணம் நடைபெற்றது.

இப்பயணத்தின் போது, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, அரசியல் உறவுகள், எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் மீன்வளப் பிரச்சினை ஆகியவற்றிற்கு நிலையானதொரு தீர்வைக் காண்பது குறித்து கலந்துரையாடினார். தித்வா புயலைத் தொடர்ந்து இலங்கைக்கான நிவாரணம், மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு உரிய நேரத்தில் இந்தியா வழங்கிய உதவியை ஜனாதிபதி திசாநாயக்க பாராட்டினார்.

பிரதமர், பேராசிரியர் ஹரினி அமரசூரிய, வருகை தந்திருந்த இந்தியத் துணை ஜனாதிபதியைக் கௌரவிக்கும் வகையில் மதிய விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அச்சந்திப்பின்போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.

இந்தியத் துணை ஜனாதிபதி கொழும்பில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அங்கு அவர் அரசியல் தலைவர்கள், சமூகத் பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், கொழும்பில் உள்ள கங்காராமய விஹாரய மற்றும் கதிரேசன் கோவிலையும் அவர் பார்வையிட்டார். நுவரெலியாவில், இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் சந்தித்தார். மேலும், சீதா அம்மன் கோயிலையும் அவர் பார்வையிட்டார்.

இவ்விஜயத்தின்போது, ​​தித்வாவைத் தொடர்ந்தான புனரமைப்புத் திட்டத்தைச் செயற்படுத்துவது உள்ளிட்ட, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாயின. மேலும், 2023-ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட International Big Cats Alliance (IBCA) கூட்டணியில் இலங்கை உத்தியோகபூர்வமாக இணைந்தது.

பிரதி ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் பாலுற்பத்தி அமைச்சு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சு ஆகியவற்றின் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி கே. லக்ஷ்மணன் மற்றும் கலாநிதி மேதா விஷ்ராம் குல்கர்னி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றும் உடன் இணைந்துகொண்டது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை தரப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டங்களில் கலந்துகொண்டனர்.


வெளிநாட்டு அலுவல்கள்
, வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01

 2026, ஏப்ரல் 22

 

Please follow and like us:

Close