
இலங்கையானது அயோரா தினத்தை மார்ச் 11 ஆம் திகதி அன்று அயோரா பெருங்கடல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சிறப்பு மையத்தின் உத்தியோகபூர்வ தொடக்கநிகழ்வுடன் விமர்சையாக கொண்டாடியது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த இக்கலப்பு நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்து கொண்டார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) நோக்கங்களுக்கு இலங்கையின் தொடர்ச்சியான ஈடுப்பாட்டினை, குறிப்பாக கடல் நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேறானதன்மையில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இத்தினம் எடுத்துக்காட்டியது. இந்நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு அயோரா தினத்தின் கருப்பொருளான "அயோரா வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறது" என்பதையும் பிரதிபலித்ததுடன், இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உள்ள சமூகங்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான பிராந்திய ஒத்துழைப்பின் உறுதியான நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்குள் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், நிலைபேறான கடல் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இலங்கையின் பங்கையும் பிரதி அமைச்சர் தனது உரையில் எடுத்துரைத்தார். புதிய முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், இலங்கையின் அயோரா கடல்சார் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சிறப்பு மையமானது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அறிவியல் சார்ந்த கடல் நிர்வாகத்தை ஆதரிப்பதற்காக ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையமாக செயற்படும் என்று கூறினார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. சஞ்சீவ் ரஞ்சனின் செய்தியும் மெய்நிகர் ரீதியில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, பிராந்திய அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், கடல்சார் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அயோராவின் இலங்கை சிறப்பு மையத்தை (CoE) இலங்கை உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்வு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலுள்ள முக்கியமான கடல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உரையாடலை முன்னேற்றும் நோக்கில் இணையவழி கருத்தரங்குகளின் (Webinars) தொடரையும் ஆரம்பித்தது. தொடக்க இணையவழி கருத்தரங்கில் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரிதா பட்டியாரச்சி முக்கிய உரை ஆற்றியதைத்தொடர்ந்து, ஊடாடும் கேள்வி பதில் அமர்வொன்றும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அயோரா உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்கள் நேரில் மற்றும் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டதுடன், உரையாடல் கூட்டாளர்களின் தூதரகத் தலைவர்கள், பார்வையாளர் நாடுகள் மற்றும் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பங்குதாரர்களும் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, மார்ச் 11





