
இலங்கைக்கு விஜயமளித்துள்ள பிரதிச்சபாநாயகர் கௌரவ லீ ஹேக் யங் தலைமையிலான கொரிய குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் 2026, பெப்ரவரி 03 அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
கொரியக் கூட்டுறவு சங்கம் (KOICA) மற்றும் கொரிய எக்ஸிம் வங்கி மூலம் இலங்கையின் அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காக கொரியக் குடியரசு அரசாங்கத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நன்றி தெரிவித்தார். தித்வா சூறாவளியின் விளைவாக ஏற்பட்ட பாதகமான வானிலை நிலைமைகளைத் தொடர்ந்து, கொரியக் குடியரசிலிருந்து பெறப்பட்ட உதவிக்கு இலங்கையின் மனமார்ந்த நன்றியையும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்கு தென் கொரிய சுற்றுலாப் பயணிகளின் வருகை சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருவதை அமைச்சர் ஹேரத் எடுத்துரைத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறைசார் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களுக்கிடையிலான உறவுகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தியத்துடன், இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அவர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். கொரியக் குடியரசில் இலங்கையர்களுக்கு அதிகரித்த தொழில்வாய்ப்புகளை எதிப்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர், இலங்கையின் அபிவிருத்திக்கான முன்னுரிமைகளுக்கு மேலும் உதவ தென் கொரிய அரசாங்கத்தின் ஆர்வத்தை தெரிவித்தார். இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்; மேலும் கொரிய குடியரசில் இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்வதாகவும் உறுதியளித்தார்.
இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நீடித்த வலுவான மற்றும் நட்புரீதியான இருதரப்பு உறவுகளை இரு தரப்பினரும் நினைவு கூர்ந்தனர், மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் மியான் லீ, கொழும்பில் உள்ள கொரியக் குடியரசின் தூதரகம் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026 பெப்ரவரி 06





