
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சர்வதேச தூதரக அமைப்புகள் மற்றும் சங்கங்களின் சம்மேளனத்தின் தெற்காசிய மாநாட்டின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, சர்வதேச தூதரக அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கான சம்மேளனத்தின் (FICAC) தலைவர், துணைத் தலைவர் மற்றும் சிறப்பு உறுப்பினர்களுக்கு சிறப்பு இரவு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த சிறப்பு இரவு விருந்துபசாரமானது, 2026 பிப்ரவரி 02 அன்று கொழும்பில் உள்ள ஷெங்க்ரி-லாவில் நடைபெற்றது.
விஷேட பிரமுகர்களை வரவேற்ற அமைச்சர் ஹேரத், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இத்தகைய ஈடுபாடுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். சர்வதேச தூதரக அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கான சம்மேளனத்தின் மாநாடுகள் பரஸ்பர கற்றல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல், நீடித்த தொழில்முறை மற்றும் தனிப்பட்ட தொடர்புகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய தளத்தை வழங்குகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
அமைச்சர் ஹேரத், இவ்வொன்றுகூடலை, தூதரக அணியினரின் வளர்ந்து வரும் பொறுப்புகள் மற்றும் இன்றைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய சூழலில் அவற்றின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். மக்களுக்கானதும், நம்பகமானதுமான முதல் தொடர்பு புள்ளிகளாக, தூதரகப் பிரதிநிதிகள், பாரம்பரிய இராஜதந்திரத்தை நிறைவு செய்யும் கணிசமான மென்சக்தியைப் பயன்படுத்துகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். அவர்களின் பங்கு இப்போது உதவி மற்றும் பாதுகாப்பிற்கு அப்பால், பொருளாதார இராஜதந்திரம், கலாச்சார ஈடுபாடு, இடர்களின் போதான உடனடி நடவடிக்கை மற்றும் மக்களிடையேயான இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவை அமைச்சர் மேலும் நினைவு கூர்ந்ததுடன், வாழ்க்கையையும், உட்கட்டமைப்பையும் மீண்டும் கட்டியெழுப்ப இலங்கையின் தேசிய முயற்சியை எடுத்துரைத்தார். 2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை என்ற நாட்டின் இலக்கைக் குறிப்பிட்டு, இலங்கை சுற்றுலாத்துறையின் தூதுவர்களாக செயற்படுமாறு தூதரக சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார். உரையின் போது, சர்வதேச தூதரக அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கான சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினர்களும் இலங்கையின் மனமார்ந்த உபசாரத்தையும், விருந்தோம்பலையும் மகிழ்வுடன் ஏற்குமாறு அமைச்சர் பிரமுகர்களை ஊக்குவித்தார்.
சர்வதேச தூதரக அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கான சம்மேளனத்தின் தலைவர் நிக்கோலஸ் மார்கரோபௌலோஸும் நிகழ்வில் உரை நிகழ்த்தினார். இவ்வுபசார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக இலங்கைக்கு நன்றி தெரிவித்த அவர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் வர்த்தக முதலீடு, சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் தனது ஈடுபாடு மற்றும் ஐக்கியத்திற்கு உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026, பெப்ரவரி 06



