
கொழும்பில் உள்ள தூதரகத் தலைவர்களுக்கு அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீட்பு முயற்சிகள் குறித்து விளக்கமளிக்க, 2025, நவம்பர் 28 ஆகிய இன்று பிரதமர் அலுவலகத்தில் கௌரவ பிரதமரால் இராஜதந்திர விளக்கவுரையொன்றிற்கான கூட்டம் கூட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் பத்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த விளக்கவுரை கவனம் செலுத்தியதுடன், உடனடி மற்றும் அதன் பின்னரான மீட்பு நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டியது.
இச்சவாலான நேரத்தில் கொழும்பில் உள்ள பெரும்பாலான இராஜதந்திர பணியகங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தங்கள் ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தின. மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதிலும், தற்போதைய நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு பங்களிப்பதிலும் இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்ற தூதரகங்கள் தங்கள் தயார்நிலையை தெரிவித்தன.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் இராஜதந்திர பணியகங்கள் மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திர பணியகங்கள் ஆகியவற்றுடனான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பிற்காக அவசரகால நடவடிக்கைப் பிரிவை நிறுவியுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 நவம்பர் 28






