காசாவில் அமைதிக்கான ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தை இலங்கை வரவேற்பதுடன், பிராந்தியத்தில் விரிவானதும், நீடித்ததுமான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முக்கிய தேவையை வலியுறுத்துகிறது. கடந்த கால மோதலால் ஏற்பட்ட ஆழ்ந்த துன்பங்களையும், பேரழிவுகளையும் அனுபவித்த இலங்கை, அமைதியின் முக்கியத்துவத்தையும், அதன் உண்மையான மதிப்பையும் ஆழமாகப் புரிந்துகொள்கிறது. இம்முக்கியமான நடவடிக்கை காசாவில் நீண்டகால அமைதிக்கு வழி வகுக்கும் என்று இலங்கை நம்புகிறது.
இவ்வொப்பந்தத்தை எட்டுவதற்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதி தலைமையிலான, கட்டார் அரசு, எகிப்தின் அரபியக் குடியரசு மற்றும் துருக்கியக் குடியரசு ஆகியவற்றின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட இக்குறிப்பிடத்தக்க முயற்சிகளை இலங்கை பாராட்டுகிறது.
பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களின் நியாயமானதும், உணர்ச்சி பூர்வதுமான கவலைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் அதே வேளையில், பலஸ்தீன மக்களின் தமது நாட்டுக்கான உரிமைக்கு தனது பூரண ஆதரவையும் இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது. நீடித்த அமைதியை அடைய பயனுறுதிப்பாடுனனான உரையாடலில் ஈடுபடுமாறு இரு தரப்பினரையும் இலங்கை வலியுறுத்துகிறது; 1967 எல்லைகளின் அடிப்படையில் இரு நாடுகளுக்கான தீர்வு தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானங்களை விரைவில் செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இலங்கை மேலும் வலியுறுத்துகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஒக்டோபர் 10


