கருப்பொருள்: “சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகளைத்தாண்டி ஒன்றாக மற்றும் சிறப்பாக செயற்படுவோம்”
தலைவர் அவர்களே, பொதுச் செயலாளர் அவர்களே, கௌரவமிக்க பிரதம விருந்தினர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே,
உலக நாடுகளிடையே சமத்துவமானதும், நீடித்ததுமான அமைதியைக் கொண்டுவரும் உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் 80வது அமர்வின் தலைவராக அன்னலெனா பேர்பொக் ஆகிய தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், எனதுரையைத் தொடங்குகிறேன். இச்சபையின், 79வது அமர்வின் போது சிறப்பானதொரு தலைமைத்துவத்தினை வகித்த, முன்னாள் தலைவர் மேதகு பிலேமன் யாங்கிற்கு எனது நாட்டின் பாராட்டுகளைத் தெரிவிக்க இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
எட்டு தசாப்தங்களாக அமைதி நிறைந்த உலகத்தை உருவாக்க அயராது உழைத்து வரும் இவ்வமைப்பின் எதிர்காலப் பாதையை வகுக்க நாம் இன்று கூடியுள்ளோம்.
இலங்கையின் ஜனாதிபதியாக முதல் முறையாக இந்த மகத்தான சபையில் உரையாற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளாக, எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் பணியாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. எமது தீர்மானங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவை, எம்மனைவரினதும் பொது வீடான இக்கிரகத்தின் எதிர்காலத்தில் தீர்க்கமான பங்கினை வகிக்கின்றன.
கௌரவமிக்க பிரதிநிதிகளே,
மனித நாகரிகத்தைப் போலவே, பழமையான வறுமையெனும் சோகம் காலவோட்டத்தில், மனிதகுலத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக, உலக நாடுகள் இவ்வேதனையான மற்றும் இடைவிடாத போராட்டத்தை எதிர்கொண்டுள்ளன. வறுமையும், அதன் விளைவாக ஏற்படும் பிரச்சினைகளும் நமது எதிர்காலத்தின் மீது தடுப்பு நிழலாய்த் தொடர்கின்றன. தீவிரமான இவ்வறுமையை ஒழிக்க இச்சபை ஒன்றுகூடல் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். எமது மனசாட்சியும் அதனை மேற்கொள்ள எமக்கு ஆணையிடுவதாக நான் நம்புகிறேன். வறுமையானது மனித வாழ்வின் பன்முகம்கொண்டதொரு பயங்கரமான எதிரியாகும். நாம் இங்கு கூடியிருந்தாலும், எனது சொந்த நாடு உட்பட, நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில், பல சிறுவர்கள் பசியால் அவதிப்படுகிறார்கள்.
சிறுவனொருவரின் கல்வி உரிமை என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமையாகும். இந்த உரிமை நமது பெரும்பாலான நாடுகளின் அரசியலமைப்புகளில் பொதிந்துள்ளது. இருப்பினும், உலகம் முழுவதும் வறுமையானது இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வியுரிமையை மறுத்துள்ளது. தன் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பெருமையாகக் கூறும் உலகில், கல்வி அணுகலற்ற சிறார்கள் இருப்பது எவ்வாறு சாத்தியமாகும்?
கல்வி என்பது ஒவ்வொரு பெரும் தேசத்தினதும் அடித்தளமாகும். அது ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகும். கல்வியில் முதலீடு செய்வது உலகளாவிய முன்னேற்றத்திற்கான முதலீடு என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.
பல வளரும் நாடுகள் வறுமைக்கு எதிரான போராட்டத்தில், அபரிமித கடன் சுமையினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கல்வி அல்லது சுகாதாரப் பராமரிப்புக்கு ஒதுக்குவதை விட, இரண்டு மடங்கு அதிகமாகக் கடன் மீள்செலுத்துகைக்கு ஒதுக்குகின்றன. இவ்வகையில், எமது மக்களும்,எம் நாடுகளும் கடன் பொறிகளில் சிக்கியுள்ளன.
நிலைபேறான வளர்ச்சிக்கான 2030 இன் நிகழ்ச்சி நிரல், எவரையும் பின்னிறுத்தாமல், பின்னடைந்த நிலையில் நிற்கும் இறுதியான நபரை முற்கொணர உறுதியளிக்கிறது. உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலான தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதனை இந்நிகழ்ச்சி நிரல் ஒப்புக்கொள்கிறது. 1995 இல் கோபன்ஹேகனில் நடந்த சமூக மேம்பாட்டுக்கான உலகளாவிய உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் நான் நினைவு கூற விரும்புகிறேன்.
இருப்பினும், போர் நிலைமைகள் மற்றும் அரசியல் திடீர் திருப்பங்கள் மற்றும் கோவிட் தொற்று போன்ற எதிர்பாராத சம்பவங்கள் இந்நம்பிக்கைக்குரிய நிகழ்ச்சி நிரல்கள் நிறைவேற்றப்படுவதனைத் தடுத்தன.
சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமையை உலகளாவிய பேரழிவாக ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நான் உங்களுக்கு முன்மொழிகிறேன்.
தலைவர் அவர்களே,
போதைப்பொருள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் உலகிற்கு ஒரு தீவிர கவக்கூறாக மாறியுள்ளன. இது ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் அது சார்ந்த குற்றம் தொடர்பான அலுவலகத்தால் வெளியிடப்பட்ட உலக போதைப்பொருள் அறிக்கை 2025 இல் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்குமொரு சிக்கலான பிரச்சினையாகிறது. போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய குற்றவியல் அமைப்புகளுக்கான சந்தை எண்ணற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. போதைப்பொருள் கும்பல்கள் நாடுகளை முழுமையாகத் தங்கள் வேட்டை மைதானங்களாக மாற்றுகின்றன. போதைப்பொருள் உலகளாவிய சுகாதாரம் மற்றும் உலகளாவிய அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன், உலகளாவிய நல்வாழ்வைப் பெரிதும் பாதிக்கிறது.
இச்சவாலை எதிர்கொள்ள இலங்கை பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், போதைப்பொருள் மற்றும் அது தொடர்பிலான குற்றம் குறித்த உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் முயற்சியில் இணையுமாறு தங்கள் அனைவரையும் மிகுந்த மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அவர்கள் தஞ்சம் புகுவதைத் தடுப்பதையும், பாதிக்கப்பட்டவர்கள் பழைய நிலைக்குத் திரும்பச்செய்ய மறுவாழ்வு மையங்களை அமைப்பதன் அவசியத்தையும் நான், தங்கள் அனைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
தலைவர் அவர்களே,
ஊழலை ஒரு தொற்றுநோயாக நாங்கள் கருதுகிறோம்; ஊழல் சமூகத்தின் பரந்த பகுதிகளுக்கு பரவலான தீங்கை விளைவிக்கிறது. ஊழலானது அபிவிருத்திக்குத் தடையொன்றாகவும், ஜனநாயகம் மற்றும் உலகளாவிய நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும், வறுமைக்கானதொரு காரணமாகவும் நாங்கள் கருதுகிறோம். "ஊழலை எதிர்த்துப் போராடுவது ஆபத்தானது. ஆனால் அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் கடுமையான ஆபத்துகளை அளிக்கிறது" என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
1948 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் உலக மக்களுக்கு குறிப்பிடத்தக்கதொரு வெற்றியாகும். மனித நாகரிகத்தின் பல்வேறு சாதனைகள் ஒரே இரவில் அடையப்பட்டவை அல்ல. அவை அனைத்தும் அசைக்க முடியாத முயற்சிகள் மற்றும் தியாகங்களின் விளைவாகும்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமானது. ஆனால் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாம் எடுக்கும் முதல் படி மிகக்கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் துணிச்சலான முதல் படியை எடுத்தால், ஆயிரம் அடிகள் பின்தொடரும். அதனை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.
தலைவர் அவர்களே, பிரதிநிதிகளே,
நான் கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்களைக் கொண்ட சிறிய தீவொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இலங்கையின் மக்கள் தொகை உலக மக்கள்தொகையில் சுமார் 0.28% ஆகும். நாம் அளவிலும், எண்ணிக்கையிலும் சிறியவர்கள் என்பது உண்மைதான். ஆனாலும், நமது நாட்டினதும், உலகின் எதிர்கால சந்ததியினரினதும் நலனுக்காக, ஊழலுக்கு எதிரான எமது உறுதியான போராட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம்.
ஊழலினால் அழுகிப்போயுள்ள தொகுதியை வேரறுப்பதானது, ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்ததொரு நோக்கமாக மாற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.
தலைவர் அவர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே,
போரைக் கண்டிப்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் நிற்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உலகில் போரை விரும்பும் எந்த தேசமும் இல்லை. போர் எங்கு நடந்தாலும், அதன் விளைவு சோகம்தான். இப்போதும் கூட, உலகின் பல நாடுகள் அந்த சோகத்தின் வலியை அனுபவித்து வருகின்றன. மூன்று தசாப்த கால போரில் பாதிக்கப்பட்டதொரு நாடாக, அதன் பயனின்மையை நாம் நன்கு அறிவோம். போரில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைகள் மற்றும் குழந்தைகளின் வலியையும் துன்பத்தையும் பார்க்கும் எவரும் இன்னொரு போரை விரும்ப மாட்டார்கள். இந்த வேதனையான காட்சிகளை நாம் எமது கண்களால் கண்டிருக்கிறோம்.
மோதல்களால் ஏற்படும் துன்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் அதனை தடுக்க முடியாத பார்வையாளராக உள்ளது. சந்தர்ப்பவாத அதிகார அரசியல் குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை ஒரு விளையாட்டாக மாற்றியுள்ளது. ஒருவரின் சொந்த அதிகாரத்தை மேம்படுத்துவதற்காக, மற்றொருவருக்கு வலியையும் துன்பத்தையும் ஏற்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. ஒரு தலைவரின் கடமை உயிர்களை அழிப்பது அல்ல, மாறாக அவர்களைப் பாதுகாப்பதாகும்.
காசாவில் நடந்து வரும் பேரழிவால் நாங்கள் மிகவும் துயரமடைந்துள்ளோம்; இது வலியும் துன்பமும் நிறைந்த திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளமையானது, குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் அழுகைகளுடன் எதிரொலிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் உடனடி போர்நிறுத்தத்தை நோக்கி தொடர்ந்து பாடுபட வேண்டும்; போதுமான மனிதாபிமான உதவி காசாவைச் சென்றடைய வேண்டும்; அனைத்து தரப்பினரினதும், பணயக்கைதிகளையும் விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் பெரிதும் அங்கீகரிக்கிறோம். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன மக்களின் சட்டம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான கவலைகள் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம். 1967 எல்லைகளின் அடிப்படையில் இரு நாடுகளின் தீர்வு தொடர்பான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தீர்மானங்களை விரைவில் செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது. சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராக இருப்பதை நிறுத்திவிட்டு, மில்லியன் கணக்கான மக்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமாகச் செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
மதத் தீவிரவாதமும், இனவெறியும்தான் மில்லியன் கணக்கான மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் போர்கள் மற்றும் மோதல்களுக்கு முக்கிய காரணங்களாகின்றன. அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்திருந்தாலும், இனவெறியின் விஷம் இன்னும் பல இடங்களில் நீடிக்கிறது. தீவிரவாத மற்றும் இனவெறி சார்ந்த கருத்துக்கள் தொற்றுநோய்களைப் போலவே கொடியவை. பல மட்டங்களில் பல முன்னேற்றங்களைக் கண்ட உலகில், இவ்வகையான தீவிரவாத மற்றும் இனவெறி சார்ந்த கருத்துக்கள் சாம்பலுக்கு அடியில் உள்ள தீப்பொறிகளைப் போல எவ்வாறு உயிர்வாழ்கின்றன என்பதை நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் இனவெறி மற்றும் மதத் தீவிரவாதத்தை எதிர்க்க நம் மனசாட்சியை எழுப்ப வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
அமைதிக்காகப் பேசுவதற்கு நாம் துணிச்சலாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் மரியாதையும், தன்மையும் அதன் அமைதிக்கான போராட்டத்தில் தங்கியுள்ளது.
வன்முறை மூலம் அல்ல, மாறாக நமது பகிரப்பட்ட மனிதாபிமான மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடைமுறையை நோக்கி நாம் நகர வேண்டும்.
மில்லியன் கணக்கான சிறுவர்கள் பசியால் இறக்கும் உலகில், நாம் பில்லியன் கணக்கான ஆயுதங்களுகாக நாம் பல பில்லியன்களைச் செலவிடுகிறோம். போதுமான சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கானோர் இறக்கும் போது, நூற்றுக்கணக்கான மில்லியன்கள் துளியும் பயனற்ற போர்களுக்கு செலவிடப்படுகின்றன. இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படும் அதே வேளையில், மில்லியன் கணக்கானவர்கள் மற்றொருவரின் நிலத்தை ஆக்கிரமிக்க செலவிடுகிறார்கள்.
இந்த உலகின் ஒவ்வொரு அங்குலத்தையும், அமைதியான சமூகங்களாக மாற்ற முடிந்தால், அது எவ்வளவு அற்புதமான உலகமாக இருக்கும்!
இங்கு கூடியிருக்கும் நாம் அனைவரும் அமைதியின் தூதர்களாக மாற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்; நமது உலகத்தை அமைதியான சமூகங்களின் தொகுப்பாக மாற்ற உறுதிபூணுவோம்.
பல குடும்ப உறுப்பினர்கள் இன்னும் தங்களது அன்புக்குரியவர்களை நினைத்து அழுகையுடன், பல தசாப்தங்களாக போரின் கொடூரங்களை அனுபவித்த நாடொன்றாக, இந்த இதயப்பூர்வமான அமைதிக்கான திட்டத்தை முன்வைக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது.
நமது நாடு மீண்டும் ஒருபோதும் போரின் கொடூரங்களை அனுபவிக்க அவசியமேற்படாது என்று நம்புகிறோம். போர்கள் இல்லாததும், அமைதி மற்றும் அழகு நிறைந்ததுமான ஒரு பூமியின் அதிசயத்தைக் காண அனைவரையும் அழைக்கிறோம். எமது நாட்டு மக்கள் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஐக்கிய இலங்கைக்கான தேசத்தைத் தேர்ந்தெடுத்தனர். அந்த ஆணையை நிறைவேற்ற எனது அரசாங்கம் திடமாக உறுதிபூண்டுள்ளது.
மரியாதைக்குரிய விருந்தினர்களே,
கடந்த தேர்தலின் போது, இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகள் பழமையான கனவை நனவாக்க முடிவு செய்தனர் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அந்த அற்புதமான தீர்மானத்திலிருந்தே, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பாராளுமன்றம் உருவாகியது; இது நாட்டின் இன மற்றும் மத ரீதியிலான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது; தற்போதைய எமது பாராளுமன்றமானது, இலங்கையின் முதல் பார்வையற்ற நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட, பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்கள் வரலாற்று ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்றமாக விளங்குகிறது.
அனைத்து குடிமக்களுக்கும், சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர் என்பதை நாம் முன்னுதாரணம் காட்டி நிரூபித்துள்ளோம். சட்டமன்ற உறுப்பினர்களின் கடமை தங்களை வளப்படுத்துவது அல்ல, மாறாக நாட்டை மேம்படுத்துவதாக்கும் என நாம் நம்புகிறோம்.
உலகளாவிய ஜனநாயகச் சுட்டெண் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில், இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது. இது குறுகிய காலத்திற்குள் அடைந்த பாரிய சாதனையொன்றாகும். விரைவில் உயர்மட்டத்தை அடைவதற்கான முன்னேற்றத்தை நோக்கி நாம் அயராது பாடுபடுகிறோம்.
தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே,
எமது மக்கள் இருளையன்றி, ஒளியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். "வளரும் தேசம், அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை நிறைவேற்ற, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளோம். சுகாதாரம் மற்றும் கல்விக்கும் நாம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த இலக்குகளை நோக்கி படிப்படியாக முன்னேறுகிறோம்.
தலைவர் அவர்களே, சிறப்புப் பிரதிநிதிகளே,
டிஜிட்டல் ஜனநாயகம் எங்கள் நோக்கங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரும் டிஜிட்டல் யுகத்தால் வழங்கப்படும் வாய்ப்புகள் மற்றும் நன்மைகளை அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வது உலகளாவிய சவாலாகும். எமது பணியில் நாம் வெற்றி பெற்றால், தொழில்நுட்பத்திற்கான கதவுகளைத் திறக்கவும், அபிவிருத்தியைத் துரிதப்படுத்தவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் முடியும். நாம் தோல்வியுற்றால், தொழில்நுட்பமானது, சமத்துவமின்மை, பாதுகாப்பின்மை மற்றும் அநீதியை ஆழப்படுத்தும் மற்றுமொரு சக்தியாக மாறும்.
நாடுகளுக்கு இடையேயான டிஜிட்டல் ஏற்றத்தாழ்வானது, பாரியதாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இன்னும் பாரிய இடைவெளி உருவாக்கப்பட்டு வருகிறது. போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், இலங்கையும் பல வளர்ந்து வரும் நாடுகளும் செயற்கை நுண்ணறிவை மேம்பாட்டு கருவியொன்றாகப் பயன்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்கின்றன.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளை அகற்ற சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென நான் கோரிக்கை விடுக்கிறேன். அத்தகைய முயற்சிகளுக்கு நிதியளிக்க, எமக்கு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை அவசியமாகிறது.
பசுமை செயற்கை நுண்ணறிவுத் தரவு மையம், சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் கூட்டாளர் நாடுகளுக்கான தரவு அமைப்பு வசதியை மையமாகக் கொண்ட நடுநிலையானதொரு இறையாண்மை கொண்ட "செயற்கை நுண்ணறிவு மண்டலம்" இலங்கையில் அமைப்பதற்கானதொரு திட்டத்தை இச்சபையில் நான் முன்வைக்கிறேன்.
சிறப்பு விருந்தினர்களே,
கடந்த பல தசாப்தங்களாக, உலக அரங்கில் ஆயுதக் குறைப்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை நிரூபித்துள்ளது. பல்தரப்பு முயற்சிகள் மூலம் நிலையான அமைதி மற்றும் கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசன அடிப்படையிலான மதிப்புகளை ஊக்குவிக்கும் அமைதி காக்கும் முயற்சிகளில் அதிக பங்கை வகிக்க விரும்புகிறோம்.
வளர்ச்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் நாம் முன்னேற வேண்டுமென்றால், அமைதி மற்றும் நீதிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு அவசியமாகின்றது.
தலைவர் அவர்களே, சிறப்பு அதிதிகளே,
நாம் புதியதும், சிறந்ததும், மனிதகுலத்தின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்குமானதொரு உலகத்தை உருவாக்க வேண்டும்.
இச்சபையின் உறுப்பினர்களாகிய நீங்கள், அந்த சிறந்த உலகத்தின் சிற்பிகளாக இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய நிகழ்வில் தலைவர் ஹெரி ட்ரூமன் கூறியது போல், "எமது எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளது".
பயத்திலோ அல்லது கட்டாயத்திலோ அல்ல, மாறாக சிறப்பானதும், பாதுகாப்பானதுமானதொரு உலகத்திற்கான நம்பிக்கையுடன் நாம் செயற்பட வேண்டும். இன்று உலகை மற்றொரு பேரழிவிற்கு இட்டுச் செல்லாமல், அடுத்த தலைமுறைக்கான சிறந்ததொரு இடமாக மாற்றுவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு எனது நாடு குறித்த கனவுகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. தங்கள் நாடுகளுக்காக தங்களுக்கும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. எனது மக்களுக்கு மகிழ்ச்சியானதும், செழுமையானதுமான வாழ்வை உறுதி செய்வதே எனது கனவாக்கும். தங்களுக்கும் அதே கனவு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த கனவுகளை ஒருவருக்கொருவர் போட்டியிட்டு அல்ல, கைகோர்த்து முன்னேறுவதன் மூலம் நனவாக்க நாம் பாடுபட வேண்டும்.
ஆரோக்கியமானதொரு கிரகத்தில் அமைதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் - அதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோள். அந்த உலகத்தின் குணப்படுத்துபவர்களாகுவோமாக.
நன்றி.


