தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த (BBNJ) மாநாட்டின் அரச தரப்பொன்றாகும் இலங்கை

 தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த (BBNJ) மாநாட்டின் அரச தரப்பொன்றாகும் இலங்கை

இலங்கையானது, தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த கடல் சட்டம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மாநாடு (BBNJ உடன்படிக்கை) குறித்த தனது ஒப்புதலுக்கான ஆவணத்தை, 2025, செப்டம்பர் 16 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்ததைத்தொடர்ந்து, மாநாட்டின் அரச தரப்பொன்றாக மாறியுள்ளது என்பதை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த உடன்படிக்கைக்கான ஒப்புதலானது, சமுத்திர நிர்வாகத்தில் இலங்கையின் தொடர்ச்சியான தலைமைத்துவ வரலாற்றில் மற்றொரு மைல்கல்லைக் குறித்து நிற்கிறது.

சர்வதேச கடல்சார் நிர்வாகத்தில், குறிப்பாக 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டை (UNCLOS) அபிவிருத்தி செய்வதில் அதன் தலைமைத்துவத்தின் மூலம் இலங்கை முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது.

கலந்துரையாடல்கள் தொடங்கியதிலிருந்து, தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றாக, மனிதகுலத்தின் நலனுக்காக கடல் வளங்களை நியாயமான முறையில் அணுகுவதையும், பாதுகாப்பதையும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் இவ்வரலாற்றுப் பயணத்தில் பங்குகொள்வதில் இலங்கை பெருமிதம் கொள்கிறது. இலங்கை, ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இணைந்து, உடன்படிக்கையைச் செயற்படுத்துவதானது, தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாலுள்ள கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பையும், நிலைபேறான பயன்பாட்டையும் மேம்படுத்துவதற்கான வழிமுறையொன்றாகக் கருதுகிறது.

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடலுயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் உள்ள பகுதிகளிலிருந்து கடல் மரபணு வளங்கள் (MGRs) மற்றும் இலத்திரனியல் வரிசை தகவல் (DSI) போன்ற வளங்களை நியாயமானதும், சமமானதுமாகப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இலங்கை பயனடைய வாய்ப்பு கிடைக்கும். இவ்வுடன்படிக்கையானது, திறன் மேம்பாடு மற்றும் கடல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பது, இலங்கை போன்ற வளரும் நாடுகள் கடலுயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதிலும், நிலைபேறான பயன்பாட்டிலும் அதன் திறன்களை மேம்படுத்துவதற்கான அதிகாரத்தினை வழங்குகிறது.

மேலும், கடலுயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கவும், காலநிலை மீள்தகைமையை உருவாக்கவும், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மேம்படுத்தவும் இலங்கையானது, ஏனைய நாடுகளுடன் இணைந்து கூட்டாகச் செயற்பட இவ்வுடன்படிக்கை வழிவகுக்கிறது.

 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 

2025, செப்டம்பர் 17

Please follow and like us:

Close