
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸ் குடியரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று அரசியல் ஆலோசனைகள் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
தொடக்க உரையை நிகழ்த்திய இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நெருக்கமான நட்புறவை விரிவுபடுத்தி வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். குறிப்பாக 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு கொழும்பில் பிலிப்பைன்ஸின் வதிவிடத் தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து பிலிப்பைன்ஸ் பரிசீலிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆசியானின் எதிர்வரும் தலைமைப் பொறுப்பை பிலிப்பைன்ஸ் ஏற்கும்போது, இலங்கை அதனுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளின் நிலையை மீளாய்வு செய்வதற்கும், பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கும் இச்சந்திப்பு பயனுறுதிமிக்க வாய்ப்பொன்றை வழங்கியது. வர்த்தகம், முதலீடு, தொழிலாளர், பாதுகாப்பு, காவற்துறை, விவசாயம், மீன்வளம், கலாச்சாரம், கல்வி மற்றும் அரசியல் மற்றும் இராஜதந்திர பரிமாற்றங்கள் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள இருதரப்பு, பிராந்திய மற்றும் பல்தரப்பு பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்பப் பரிமாற்றம், நீர்ப்பாசனம், உணவுப் பாதுகாப்பு மற்றும் அரிசி ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன், தேங்காய் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்களில் சிறப்பு கவனம் செலுத்தி விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவை ஆழமான ஈடுபாட்டிற்கான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டதுடன், பிலிப்பைன்ஸின் மேம்பட்ட நிபுணத்துவத்திலிருந்து, குறிப்பாக 'பால்மீன்' இனப்பெருக்க தொழில்நுட்பத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இலங்கை வரவேற்றது.
இரு தரப்பினரும் தொழிலாளர் துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர், இலங்கை இடம்பெயர்வு நிர்வாகத்தில் பிலிப்பைன்ஸின் உலகளாவிய தலைமையை அங்கீகரித்தது. தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்த வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான அவசியத்தையும், புறப்படுவதற்கு முந்தைய ஆயத்தம், ஒழுங்குபடுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பணியமர்த்தல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் குறித்த அறிவுப் பகிர்வு ஆகியவற்றின் அவசியத்தையும் விவாதங்கள் எடுத்துரைத்தன. குறிப்பாக பிலிப்பைன்ஸின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் (TESDA) கூட்டாண்மைகள் மூலம் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் வரவேற்கப்பட்டன.
இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிலிப்பைன்ஸின் சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பணிகள் மையம் (CITEM) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு மூலம், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தன.
2026 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவை நினைவு கூட்டு தபால் தலைகளை வெளியிடுதல், கொழும்பில் உலகப் புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் சோப்ரானோ இரட்டையர்களான தி நைட்டிங்கேல்ஸ் மற்றும் திரு. பிரை சிமாஃப்ராங்காவின் இசை நிகழ்ச்சி, கொழும்பில் ஒரு திரைப்பட விழா மற்றும் பிலிப்பைன்ஸ் சமையல் இரவு உள்ளிட்ட பல முயற்சிகளுடன் கொண்டாட ஒப்புக்கொள்ளப்பட்டது.
இவ்வாலோசனைகளுக்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கிழக்குப் பகுதி இருதரப்பு அரசியல் அலுவல்களுக்கான மேலதிகச் செயலாளர் சசிகலா பிரேவர்தனே மற்றும் பிலிப்பைன்ஸ் வெளிநட்டு அலுவல்கள் திணைக்களத்தின் (DFA) கொள்கைக்கான துணைச் செயலாளர் மா ஹெலன் பி. டி லா வேகா ஆகியோர் இணை தலைமை தாங்கினர்.
பிலிப்பைன்ஸ் பிரதிநிதிகள் குழுவில் தூதுவர் நினா பி. கெய்ங்லெட், ஆசிய மற்றும் பசிபிக் விவகார அலுவலகப் பணிப்பாளர் மரியா ஷீலா யு மொனெடோரோ-ஆர்னெஸ்டோ, கொள்கைக்கான துணைச் செயலாளர் அலுவலகத்தின் சிறப்பு உதவியாளர் ஜே பிரான்சிஸ் ஜி அல்காண்டரா மற்றும் ஆசிய மற்றும் பசிபிக் விவகார அலுவலக உதவிபணிப்பாளர் போஜர் பி. கேப்டாய் ஆகியோர் அடங்குவர்.
இலங்கை பிரதிநிதிகள் குழுவில் பிலிப்பைன்ஸிற்கான இலங்கை தூதுவர் டாக்டர் சானக தல்பஹேவா, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பணிப்பாளர் நாயகம் சாமரி ரொட்ரிகோ, அமைச்சு மற்றும் பிற வரிசை அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் அடங்குவர்.
அடுத்த சுற்று அரசியல் ஆலோசனைகள் 2026 இல் மணிலாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025, செப்டம்பர் 13





